தனுஷ் நடிக்கும் படப்பிடிப்பு பகுதியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

தென்காசி அருகே தனுஷ் நடிக்கும் படப்பிடிப்பு பகுதியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.
தனுஷ் நடிக்கும் படப்பிடிப்பு பகுதியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
Published on

தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறை கிராமத்தில் மேற்கு தொடர்ச்சிமலை அடிவார பகுதியில் நடிகர் தனுஷ் நடிக்கும் `கேப்டன் மில்லர்' என்ற சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

இந்த படப்பிடிப்பு விதிகளை மீறி நடைபெறுவதாகவும், முறையான அரசு அனுமதி இல்லாமல் நடத்தப்படுவதாகவும் தகவல்கள் பரவின. குண்டு வெடிக்கும் காட்சிகள் பட வீடியோ வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் படப்பிடிப்பை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டார். அதன்படி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராணுவ வாகனங்கள் போன்ற வாகனங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன. படப்பிடிப்பு குழுவினரில் ஒரு சிலர் மட்டும் அங்கு உள்ளனர்.

இங்கு செல்லும் மெயின்ரோட்டில் நுழைவுவாயில் பகுதியில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் பொதுப்பணித்துறை மூலம் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகைகள் அகற்றப்பட்டு தரையில் கிடக்கின்றன.

இந்தநிலையில் வருவாய்த்துறை, வனத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்று திடீர் ஆய்வு செய்தனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்களும் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து படப்பிடிப்பு குழுவினர் கூறும்போது, வெடிகுண்டு எதுவும் வெடிக்கப்படவில்லை. சினிமாவுக்காக சிறிய அளவிலான வெடிவைத்து அதனை சுற்றி பெட்ரோல் ஊற்றி வெடிக்கச் செய்யப்பட்டது. இதனால் அது பெரிய வெடிகுண்டு வெடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது, என்றனர்.

இதுபற்றி அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள். படப்பிடிப்பு குழுவினர் முறையான அனுமதி பெறுவதற்காக அதிகாரிகளை நாடி வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, தற்போது வரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. முறையான அனுமதி பெற்று படப்பிடிப்பை தொடங்கலாம், என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com