மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு ஆதார் அட்டை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை

மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு ஆதார் அட்டை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு ஆதார் அட்டை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை
Published on

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் பர்மா காலனியை சேர்ந்த நந்தகோபால்-ராதிகா தம்பதியின் மகன் மணிகண்டன்(வயது 12). மாற்றுத்திறனாளி. நந்தகோபால், ராதிகா ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மணிகண்டனை அவரது பாட்டியான சுந்தராம்பாளும், அவரது சகோதரியும் வளர்த்து வருகின்றனர். மணிகண்டனுக்கு மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு ஆதார் அட்டை வழங்கப்படாததால், ஊனமுற்றோருக்கான அரசு உதவிகளை பெற முடியாமல் தவித்து வருகிறார். இதேபோல் அவரது வீட்டில் மின்வசதி, ரேஷன் அட்டை இல்லை. இது குறித்து விசாரணை நடத்திய ஆலங்குடி தாசில்தார் விஸ்வநாதன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசனுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கோட்டாட்சியர் மற்றும் துணை கலெக்டர் ஜெயாஸ்ரீ ஆகியோர் கீரமங்கலம் பகுதிக்கு சென்று மணிகண்டனை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆலங்குடி தபால் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அவனுக்கு ஆதார் எண் பதிவு செய்யப்பட்ட பின்னர், அவனை மீண்டும் அவனது வீட்டிற்கு அழைத்து சென்று விட்டனர். மேலும் அவனுக்கான அனைத்து ஆவணங்களையும் உடனடியாக வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கோட்டாட்சியர் உத்தரவிட்டார். அதன்பேரில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com