வணிக எரிவாயு சிலிண்டர் ரூ.91 விலை குறைப்பு எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.91 விலை குறைக்கப்பட்டு ரூ.2 ஆயிரத்து 40-க்கு விற்பனை செய்யப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து உள்ளன.
வணிக எரிவாயு சிலிண்டர் ரூ.91 விலை குறைப்பு எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு
Published on

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.

இதில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை தினந்தோறும் என்ற அடிப்படையிலும், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மாதத்தில் முதல் தேதி அல்லது மாதத்துக்கு 2 முறை என்ற அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படுகிறது.

வணிக சிலிண்டர் விலை குறைப்பு

இதன்படி, கடந்த 3 மாதங்களாக வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த டிசம்பர் மாதத்துக்கான வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.101 ஆக அதிகரித்து சிலிண்டர் விலை ரூ.2 ஆயிரத்து 234.50 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து கடந்த ஜனவரி மாதத்துக்கான வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தன. இதன்படி, 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.103.50 குறைக்கப்பட்டு ரூ.2,131 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

இந்நிலையில், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மேலும் குறைத்துள்ளன. இதன்படி, வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.91 குறைக்கப்பட்டு ரூ.2,040 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்படவில்லை. அதன் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.915.50க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல், 5 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களின் விலை ரூ.337 எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

டெல்லி விலை

டெல்லியில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.91.50 குறைந்ததை அடுத்து சிலிண்டர் ரூ.1,907க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேற்கண்ட தகவல்களை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com