‘ஒகி’ புயலால் நடுக்கடலில் சிக்கி மாயமான 1,000 மீனவர்களின் கதி என்ன?

‘ஒகி’ புயலால் நடுக்கடலில் சிக்கி மாயமான மீனவர்களை தேடி கண்டுபிடித்து மீட்கும் பணியில் கடற்படை மற்றும் கடலோர காவல்படை கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.
‘ஒகி’ புயலால் நடுக்கடலில் சிக்கி மாயமான 1,000 மீனவர்களின் கதி என்ன?
Published on

நாகர்கோவில்,

கன்னியாகுமரி அருகே நிலை கொண்டிருந்த ஒகி புயல் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.

இதனால் போக்குவரத்து முடங்கியதோடு, மின்சார சப்ளையும் துண்டிக்கப்பட்டு மாவட்டம் இருளில் மூழ்கியது. தற்போது அங்கு நீர் வடிய தொடங்கி இருக்கிறது. புயல்-மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. புயல் லட்சத்தீவை நோக்கி நகர்ந்து சென்று விட்ட போதிலும் கடல் இன்னும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சின்னத்துறை, பூத்துறை, தூத்தூர், இரவிபுத்தன்துறை, வள்ளவிளை, முட்டம், தேங்காய்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்று இருந்தனர்.

அவர்களில் கணிசமான பேர் கரைக்கு திரும்பிவிட்ட நிலையில், 1,000-க்கும் மேற்பட்டோர் இன்னும் கரை திரும்பவில்லை. நடுக்கடலில் புயல்-மழையில் சிக்கிய அவர் களுடைய கதி என்ன ஆனது? என்று தெரியவில்லை. இதனால் அவர்களுடைய குடும்பத்தினரும், உறவினர்களும் மிகுந்த கவலை அடைந்து உள்ளனர். புயலில் சிக்கி நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை கண்டுபிடித்து மீட்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

இந்திய கடற்படைக்கு சொந்தமான நிரீஷக், ஜமுனா, சாகர்த்வானி, ஷர்துல், சாரதா உள்ளிட்ட 8 கப்பல்கள், 5 விமானங்கள், இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான 8 கப்பல்கள், 2 விமானங்கள் மற்றும் 3 ஹெலிகாப்டர்களும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கின்றன.
கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் நடுக்கடல் பகுதிக்கு சென்று மாயமான மீனவர்களை தேடி வருகிறார்கள். மீனவர்களை மீட்க மத்திய- மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க கோரி சின்னத்துறை என்ற இடத்தில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மீனவர்களும், ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர்.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து கட்டுமான பொருட்கள் மற்றும் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு லட்சத்தீவுக்கு சென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு படகு புயலில் சிக்கி தத்தளித்தது. இதனால் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது. திடீரென்று நங்கூரம் துண்டிக்கப்பட்டதால் கடல் சீற்றம் காரணமாக படகு நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்பட்டு சேதம் அடைந்தது.

அந்த படகில் இருக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த அசோக் மரியலூர்து சந்தியாகு, ஜான்சன், மாரிசெல்வம், காளிதாஸ், ஹெரால்டு, வில்சன், வல்லரியன், மங்களூருவை சேர்ந்த வில்லியம் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருக்கும், கடலோர காவல் படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, கடலோர காவல் படையினர் அங்கு விரைந்து சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

நடுக்கடலில் நாட்டுப்படகு கவிழ்ந்ததால் பூத்துறையைச் சேர்ந்த பிரான்சிஸ் (வயது 47) என்ற மீனவர் கடலில் பல மைல் தூரம் நீந்தி கரை சேர்ந்தார். இதேபோல் தூத்தூரை சேர்ந்த 2 மீனவர்கள் படகு கவிழ்ந்ததால் கடலில் நீந்தி கேரள மாநிலம் விழிஞ்சம் பகுதியில் கரை சேர்ந்த தகவல் வெளியாகி இருக்கிறது.

இதற்கிடையே, குளச்சல் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற 60 பேர் கேரள மாநில திருச்சூர் அருகே கரை சேர்ந்ததாகவும், அவர்களை பஸ்சில் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் தெரிவித்து உள்ளார். புயலில் சிக்கிய சில படகுகள் லட்சத்தீவு அருகே உள்ள ஆளில்லா தீவுக்கு அடித்துச் செல்லப்பட்டதாகவும், அந்த படகுகளில் இருந்த மீனவர்கள் குடிதண்ணீர், உணவு இன்றி அங்கு தவித்து வருவதாகவும் அவர்களுடைய உறவினர்கள் தெரிவித்து உள்ளனர். தீவில் தவிக்கும் மீனவர்களை அரசு விரைவில் மீட்டுக்கொண்டு வரவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 4 மீனவர்கள் கடற்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு கொச்சிக்கு கொண்டு வரப்பட்டனர். கடற்படைக்கு சொந்தமான நிரீஷக் என்ற கப்பல் ஆலப்புழா அருகே நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 2 மீனவர்களை மீட்டது. சாகர்வாணி என்ற கப்பல் திருவனந்தபுரத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் கடலில் மிதந்து கொண்டிருந்த மீனவர் ஒருவரின் உடலை மீட்டது.

மீட்பு நடவடிக்கை குறித்து ராணுவத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஒகி புயல் காரணமாக 18 படகுகளுடன் கடலில் சிக்கி தவித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 198 மீனவர்கள் லட்சத்தீவு மற்றும் மினிக்காய் தீவுகளில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டு உள்ளனர். கடலோர காவல் படையின் வைபவ் கப்பல் மூலம் நேற்று முன்தினம் ஒரு மீனவர் மீட்கப்பட்டு நேற்று விழிஞ்சத்தில் உள்ள முகாமில் ஒப்படைக்கப்பட்டார்.

இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான டோர்னியர் விமானமும், ஆதீஸ் கப்பலும் கடலில் காற்று குறைந்த பகுதிகளில் தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளன. கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர காவல் படையின் டி-2 கப்பல் மற்றும் ஒரு விமானம் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com