ஒகி புயல் சேதம்: மத்திய குழுவிடம் முழு விவரங்களை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்

ஒகி புயல் சேத விவரம் குறித்து மத்திய குழுவிடம் முழு விவரங்களை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஒகி புயல் சேதம்: மத்திய குழுவிடம் முழு விவரங்களை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்
Published on

சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டிப் போட்டு, சிதைத்துச் சின்னாபின்னமாக்கியுள்ள ஒகி புயல் ஏற்படுத்தியுள்ள மிகப்பெரும் பாதிப்புகளை பார்வையிட மத்தியக்குழு வந்திருக்கிறது. 2017 நவம்பர் மாதம் 29ந்தேதி ஏற்பட்ட மிக மோசமானதும், நூற்றாண்டில் காணாததுமான புயல் சேதங்களை பார்வையிட, 29 நாட்கள் கடந்த பிறகு வெகுசாவகாசமாக மத்தியக்குழு வந்திருப்பது வேதனையளிக்கிறது. இந்த வீண் காலதாமதத்திற்கு அ.தி.மு.க. அரசு தான் முழு முதல் காரணம் என்பதை யாரும் மறுத்திட முடியாது.

ஒகி புயல் பாதிப்பினை முன்னிட்டு கன்னியாகுமரியில் நிரந்தர சீரமைப்புப் பணிகளை நிறைவேற்ற 5255 கோடி ரூபாயும், அங்கு கடல் அலை தடுப்புச் சுவர்கள் கட்டுவதற்கு 4047 கோடி ரூபாய், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு சீரமைப்பு நிதியாக 4218 கோடி ரூபாய் என்று மொத்தம் 13520 கோடி ரூபாய் நிதி மத்திய அரசிடமிருந்து கோரப்பட்டிருந்தாலும், மத்திய பா.ஜ.க. அரசு முதல் கட்டமாக 1000 கோடி ரூபாய் கூட இதுவரை ஒதுக்க முன்வரவில்லை என்பது கவலைக்குரியது.

ஆகவே, முன்பு காவிரிப் பிரச்சினை குறித்து விசாரிக்க வந்த மத்திய குழுவிடம் விவசாயிகள் தற்கொலையை மறைத்தது போல், கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போயிருக்கும் மீனவர்களின் எண்ணிக்கையை, ஒகி புயல் குறித்து விசாரிக்க வந்துள்ள மத்திய குழுவிடம் இந்த அரசு மறைத்து விடக்கூடாது என்று எச்சரிக்க விரும்புகிறேன். ஆழ்கடலில் மீன்பிடிக்கப் போன மீனவர்கள் எத்தனை பேர், மீட்கப்பட்டவர்கள் எத்தனை பேர், இன்னும் காணாமல் போயிருப்பவர்கள் எத்தனை பேர் என்ற முழு விவரங்களையும் மத்திய குழுவிடம் கொடுத்து, தமிழகம் கோரியிருக்கும் 13 ஆயிரத்து 520 கோடி ரூபாய் நிதியை முழுமையாக உடனடியாக மத்திய அரசிடமிருந்து பெற வேண்டும்.

காணாமல் போன மீனவர்கள் எத்தனை பேர் என்பதை உறுதி செய்து, அவர்களது குடும்பங்களுக்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவியை இனியும் தாமதம் செய்யாமல் அளித்து, அவர்களைக் காப்பாற்ற முன் வருவதுடன், மத்திய குழுவுடன் மூத்த தமிழக அமைச்சர்கள் இருவரை அனுப்பி, கன்னியாகுமரி மாவட்டத்தின் முழு சேத விவரங்களையும் எடுத்து விளக்கி, சிதிலமடைந்திருக்கும் அனைத்து கிராமங்களுக்கும் அழைத்துச் சென்று, அங்குள்ள மீனவ மக்கள், ரப்பர், வாழை மற்றும் தேனீ வளர்ப்பு விவசாயிகள் அனைவருக்கும் உரிய முழு நிவாரணம் கிடைக்கவும், தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், கிராம மற்றும் நகர்ப்புற சாலைகள், மின் கம்பங்கள் போன்று கடுமையான சேதத்திற்கு உள்ளாகியுள்ள உட்கட்டமைப்பு வசதிகளைச் சீரமைக்கவும் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மத்திய குழுவும் வந்தோம், பார்த்தோம், போனோம் என்றில்லாமல், கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்போல் சகஜ வாழ்க்கை மீண்டும் தொடங்குவதற்கும், இனி எதிர்காலத்தில் இதுபோன்றதொரு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையிலும் முழுமையான அளவில் மத்திய நிதி கிடைப்பதற்கு ஏதுவாக மத்திய குழுவின் ஆய்வும் விசாரணையும் அமைந்திட வேண்டும் என்றும், அதற்குத் தகுந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அ.தி.மு.க. அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com