

தூத்துக்குடி,
விளாத்திகுளம் அருகே நள்ளிரவில் மூதாட்டியை கழுத்தறுத்து கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு, அவரிடமிருந்த 8 சவரன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், புதூர் அடுத்துள்ள காடல்குடி காவல் எல்லைக்குட்பட்ட வடமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி கலாவதி (வயது 62). இந்த தம்பதியருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் 3 பேருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருவதால், கண்ணனும், கலாவதியும் மட்டும் வடமலாபுரத்தில் உள்ள தங்களது வீட்டில் வசித்து வந்தனர்.
வழக்கம் போல் நேற்று இரவும் கலாவதி வீட்டின் உள்ளேயும், அவரது கணவர் கண்ணன் வீட்டின் வாசலிலும் படுத்து உறங்கியுள்ளனர். இன்று காலை சுமார் 6 மணி அளவில் கண்ணன் எழுந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, கலாவதி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், கலாவதி கழுத்தில் அணிந்திருந்த, ரூ.7 லட்சம் மதிப்புள்ள 8 சவரன் தாலிச் செயினை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து கண்ணன் அளித்த தகவலின் பேரில், புதூர் காவல் நிலைய பொறுப்பு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் காடல்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மூதாட்டி தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து இந்த துணிகர கொலையையும், கொள்ளையையும் அரங்கேற்றியுள்ளது தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த தடய அறிவியல் துறை மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்குள்ள தடயங்களை சேகரித்தனர். சோதனையில், வீட்டிற்குள் சம்பந்தமில்லாத 2 பேரின் கைரேகைகள் பதிவாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய், வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
கலாவதியின் உடலை கைப்பற்றிய போலீசார், உடற்கூறாய்விற்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கொலை செய்த மர்ம நபர்களை தனிப்படை அமைத்துத் தீவிரமாக தேடி வருகின்றனர். மூதாட்டி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் வடமலாபுரம் கிராம மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.