

சென்னை,
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளின் பெண்கள் ஆக்கி பிரிவில் இன்று (நேற்று) நடைபெற்ற 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் பிரிட்டன் அணியிடம் தோல்வி அடைந்ததை எண்ணி இந்திய வீராங்கனைகள் கண்ணீர் விட்டு கலங்கியது மிகவும் வேதனை அளிக்கிறது. அவர்கள் போட்டியில் தோற்றிருக்கலாம். ஆனால் இந்தியர்களின் இதயங்களை வென்றிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் கண்ணீர் விடவோ, கவலைப்படவோ தேவையில்லை. மாறாக இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததற்காக இந்திய பெண்கள் ஆக்கி அணியினர் பெருமிதம் கொள்ள வேண்டும்.
ஒலிம்பிக் ஆக்கி போட்டிகளின் அரை இறுதி ஆட்டம் வரை இந்திய பெண்கள் அணியினர் முன்னேறினார்கள். ஒலிம்பிக் பெண்கள் ஆக்கி வரலாற்றில் இந்திய அணி அரை இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது இதுவே முதல்முறை. இந்திய அணியை பொறுத்தவரை இது மிகப்பெரிய சாதனையாகும்.
ஒலிம்பிக் பெண்கள் ஆக்கி போட்டியில் பங்கேற்ற இந்தியா தவிர்த்த பிற நாட்டு அணியினருக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி வழங்கப்பட்டது. ஆனால் இந்திய மகளிர் ஆக்கி அணியினருக்கு அத்தகைய வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒடிசா மாநில அரசு சில கோடி ரூபாய் உதவிகளை வழங்கியது. அதுவும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் ஓர் அணியின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு போதுமானதல்ல.
இந்திய பெண்கள் ஆக்கி அணிக்கு மிகப்பெரிய அளவில் ஒலிம்பிக் அனுபவம் இல்லை. இதுவரை இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் மட்டுமே இந்திய பெண்கள் ஆக்கி அணி பங்கேற்றிருக்கிறது. இதுதான் அவர்களின் 3-வது ஒலிம்பிக் போட்டியாகும். ராணி ராம்பால் தலைமையிலான இந்திய ஆக்கி அணியில் இடம்பெற்றுள்ள 16 வீராங்கனைகளில் 8 பேருக்கு இதுதான் முதல் ஒலிம்பிக் போட்டியாகும். பல்வேறு நெருக்கடிகளையும், இடர்ப்பாடுகளையும் தாங்கிக் கொண்டு இந்திய பெண்கள் ஆக்கி அணி அரை இறுதி வரை முன்னேறியதும், ஆஸ்திரேலியா போன்ற உலகின் வலிமை வாய்ந்த அணிகளை வீழ்த்தியதும் இந்திய பெண்கள் ஆக்கி வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய சாதனையாகும்.
இந்தியாவின் பெருமைமிகு மகள்களே. 3-வது இடத்திற்கான ஆட்டத்தின் முதல் பாதி வரை வலிமை வாய்ந்த பிரிட்டன் அணியைவிட அதிக கோல் அடித்து நீங்கள் தான் முன்னணியில் இருந்தீர்கள். கடைசியில் தான் ஆட்டம் திசை மாறியது. விளையாட்டுகளில் இது இயல்புதான். இதற்காக நீங்கள் கலங்க வேண்டாம். இன்றைய போட்டியில் தோற்றதற்காக கண்ணீர் விட்ட நீங்கள் அடுத்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று ஆனந்த கண்ணீர் விடப்போவதை இந்த உலகம் பார்க்கத்தான் போகிறது.
அதற்காக பாம.க. சார்பில் இப்போதே எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஒலிம்பிக் பெண்கள் ஆக்கி போட்டியில் இந்திய அணியினரின் போர்க்குணமிக்க ஆட்டத்தை பாராட்டும் வகையில் இந்திய அணிக்கு பா.ம.க. சார்பில் ரூ.10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.