ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதியுடன் 100 தற்காலிக படுக்கைகள் தயார்

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 தற்காலிக படுக்கைகள் தயாராக உள்ளது என டீன் டாக்டர் ஜெயந்தி தெரிவித்தார்.
ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதியுடன் 100 தற்காலிக படுக்கைகள் தயார்
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை தாக்கம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தொடங்கியது. அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்திலேயே சென்னையில்தான் 2-வது அலையில் அதிகமானோர் பாதிப்புக்கு ஆளாகினர்.

இதனால் சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிந்தன. பாதிப்புக்கு ஆளான பல நோயாளிகள் ஆம்புலன்சில் உள்ள ஆக்சிஜன் உதவியுடன் ஆஸ்பத்திரியின் வெளியே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டது.

100 தற்காலிக படுக்கைகள்

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் 3-வது அலை தொடங்கிவிட்டதோ? என்ற அச்சம் பொதுமக்களிடம் நிலவுகிறது.

இதையடுத்து கொரோனா நோயாளிகள் ஆம்புலன்சில் காத்திருப்பதை தவிர்க்க ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆஸ்பத்திரி வளாகத்தில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு, ஆக்சிஜன் செறிவூட்டி எந்திரங்கள் (ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்) உதவியுடன் 100 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி கூறியதாவது:-

200 வென்டிலேட்டர்கள்

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வசதி கொண்ட 850 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 100 குழந்தைகள் சிறப்பு சிகிச்சை படுக்கைகள் மற்றும் 15 குழந்தைகள் தீவிர சிசிச்சை படுக்கைகள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்தின் 3-வது அலையை எதிர்கொள்ளும் விதமாக ஆக்சிஜன் செறிவூட்டி எந்திரம் உதவியுடன் 100 தற்காலிக படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் 200 வென்டிலேட்டர்கள், 800-க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டி எந்திரங்கள், 2 அதிநவீன ஆக்சிஜன் தயாரிக்கும் எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. தற்போது உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் நோயாளிகள், மிகவும் லேசான அறிகுறிகளுடன் ஆக்சிஜன் சிகிச்சை தேவைப்படாத நிலையில் உள்ளனர். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதோர் அல்லது ஒரு ஊசி மட்டுமே செலுத்திக்கொண்டோருக்கு மட்டுமே ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com