தமிழகத்தில் 12 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி

தமிழகத்தில், 12 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளன. அவர்களது மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 12 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி
Published on

சென்னை,

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நைஜீரியாவில் இருந்து தோகா வழியாக கடந்த 10-ந்தேதி சென்னை வந்த 47 வயது நபருக்கு தற்போது ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் டாக்டர்களின் நேரடி கண்காணிப்பு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது குடும்பத்தினர் 6 பேருக்கும் ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. அதாவது எஸ்-ஜீன் குறைபாடு இருக்கிறது. மேலும் ஒமைக்ரான் பாதிப்புக்குள்ளான நபருடன் உடன் வந்த ராமாபுரத்தை சேர்ந்த நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேருக்கும் இந்த எஸ்-ஜீன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.

12 பேருக்கு அறிகுறி

இந்தநிலையில் இன்று (நேற்று) காலை காங்கோவில் இருந்து வந்த ஆரணியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் எஸ்-ஜீன் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் இதுவரை மொத்தம் 12 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களது மாதிரிகள் பெங்களூரு மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்.

சென்னை சாலிகிராமத்தில் நடந்த இறுதிச்சடங்கில் ஒமைக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்ட நபருடன் பங்கேற்றவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் என தற்போது வரை 59 பேரை கண்டறிந்து, அவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறோம். தற்போது ராமாபுரத்தை சேர்ந்த நபரின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அவர் சென்ற இடங்களை ஆராய்ந்து 219 பேரை கண்டறிந்து அவர்களுக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறோம்.

47 பேர் சிகிச்சை

தற்போது வரை வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்து கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 47 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்தவகையில் தீவிர கண்காணிப்பு வளையம் அமைத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com