சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு ‘ஒமைக்ரான்’ அறிகுறி கண்டறியும் பரிசோதனை

சென்னையில் கடந்த 2 வார காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ‘ஒமைக்ரான்’ அறிகுறி கண்டறியும் ஆய்வு நடந்து வருகிறது. இதுவரை 5 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு ‘ஒமைக்ரான்’ அறிகுறி கண்டறியும் பரிசோதனை
Published on

ஒமைக்ரான் வைரஸ்

ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை தொடர்ந்து, சுகாதாரத்துறை சார்பில் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வருபவர்களை தீவிரமாக கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிறதா? என்பதை கண்டறிய அவர்களது மாதிரிகள் சென்னை, புனே, பெங்களூருவில் உள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், ஒமைக்ரான் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் 150 படுக்கைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அந்தவகையில் சென்னையில் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி ஆஸ்பத்திரியில், கிண்டி கிங்ஸ் ஆஸ்பத்திரியிலும் தனி படுக்கைகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

பரிசோதனை ஆய்வகம்

ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் ஒமைக்ரான் வைரசுக்கு சிகிச்சை அளிக்க தீவிர சிகிச்சை பிரிவு (ஐ.சி.யு) படுக்கைகள் நேற்று பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அதேபோல், ஒமைக்ரான் தொற்று பாதிப்பு அறிகுறியை கண்டறியும் டேக்பாத் பரிசோதனை ஆய்வகமும் பயன்பாட்டுக்கு வந்தது.

இதுகுறித்து ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ஜெயந்தி கூறியதாவது:-

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சந்தேகத்துக்குரிய நபர்களின் மாதிரிகளில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று அறிகுறி இருக்கிறதா? என்பதை கண்டறியும் டேக்பாத் ஆய்வக பரிசோதனை நடந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளை பரிசோதனை செய்யும் போது, ஒமைக்ரான் அறிகுறி உறுதி செய்யப்பட்டால், அடுத்தகட்டமாக அதனை மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிறதா என உறுதி செய்யப்படும்.

முக கவசம் கட்டாயம்

டேக்பாத் பரிசோதனை ஆய்வகத்தில் பரிசோதனை முடிவு 4 முதல் 6 மணி நேரத்தில் தெரியவரும். தற்போது, ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் இந்த பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பை தடுக்க பொதுமக்கள் கட்டாயம் முக கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். மேலும், தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com