

சென்னை,
ஆம்னி பேருந்துகளுக்கு பர்மிட் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், பயணிகளுக்கான போக்குவரத்து வசதியில் ஏற்படும் பற்றாக்குறை, அரசிற்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பு மற்றும் பேருந்து உரிமையாளர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;-
“சென்னையில் இருந்து தினசரி தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு சுமார் 1,200 ஆம்னி பேருந்துகளும், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, புதுச்சேரி, தெலங்கானா உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமார் 600 பேருந்துகளும் என மொத்தம் 1,800 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு, 70,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர். தமிழகம் முழுவதும் 6,000-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் மூலம் தினசரி 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்து வருகின்றனர். இத்துறை பொதுமக்களின் போக்குவரத்துத் தேவையில் முக்கியப் பங்காற்றுவதுடன், அரசிற்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.900 கோடி நேரடி வருவாயும், சுமார் ரூ.3,000 கோடி மறைமுக வருவாயும் கிடைக்க முக்கியப் பங்களிப்பை வழங்கி வருகிறது.
நமது அரசு பொறுப்பேற்ற பின்னர், போக்குவரத்து ஆணையர் காலத்தில் 51 நாட்களுக்கும் மேலாக ஆம்னி பேருந்துகளுக்கான பர்மிட்கள் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தன. தற்போதைய போக்குவரத்து ஆணையர் பொறுப்பேற்றவுடன், பர்மிட் விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் செயல்படுத்த வசதி ஏற்படுத்தி, முதற்கட்டமாக சுமார் 270 பர்மிட்களை விரைவாக வழங்கினார். இருப்பினும், அதன் பின்னர் விண்ணப்பிக்கப்பட்ட சுமார் 300 பர்மிட்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளன.
மேலும், ஏற்கனவே வழங்கப்பட்ட 270 பர்மிட்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பல பேருந்துகளுக்கு, ஒரு பேருந்துக்கு காலாண்டுக்கு சுமார் ரூ.1.50 லட்சம் சாலை வரி செலுத்தப்பட்டிருந்தும், போக்குவரத்து ஆணையரின் இறுதி ஒப்புதல் (Approval) கிடைக்காததால் அவற்றை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று புதிய சுற்றுலா பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகளுக்கான பதிவு/ஒப்புதல் பணிகளும் ஒரு மாதத்திற்கும் மேலாக நிலுவையில் இருப்பதால், பேருந்து உரிமையாளர்களுக்கு பெரும் பொருளாதார இழப்பும், அரசிற்கு வரி வருவாய் இழப்பும், பயணிகளுக்குத் தேவையான போக்குவரத்து வசதியில் பற்றாக்குறையும் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள 22 எல்லை சுங்க சாவடிகளிலும் தலா ஒரு வாகனத்திற்கு 500 ரூபாயிலிருந்து 3000 ரூபாய் வரை கையூட்டு பெற்று வருகிறார்கள்.
தற்போது கோயம்பேட்டில் ஆம்னி பேருந்துகளுக்காக வழங்கப்பட்டுள்ள இடத்தில் சுமார் 150 பேருந்துகளை மட்டுமே நிறுத்தக்கூடிய வசதி உள்ள நிலையில், தினசரி சுமார் 1,200 ஆம்னி பேருந்துகள் இப்பகுதி வழியாக இயக்கப்படுவதால் போதுமான பேருந்து நிறுத்தம், காத்திருப்பு (Staging), பயணிகள் ஏறும் வசதி மற்றும் பேருந்துகள் தடையின்றி வந்து செல்லும் இடவசதி இல்லாமல் சாலைகளில் தேவையற்ற நெரிசல் ஏற்படுகிறது.
தற்போது முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் உள்ள கோயம்பேடு CMDA பேருந்து நிலையத்தை ஆம்னி மற்றும் அரசு பேருந்துகளின் பயன்பாட்டிற்கு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ வழங்க வேண்டும். கோயம்பேட்டில் மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்து மற்றும் தனிநபர் வாகன இணைப்பு வசதிகள் இருப்பதால், வடசென்னை, மத்திய சென்னை மற்றும் மேற்கு சென்னை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் எளிதாக பேருந்து நிலையத்தை அடைய முடியும்; பேருந்து நிலையத்தின் உள்ளேயே பயணிகளை இறக்கி/ஏற்றுவதன் மூலம் சுற்றுப்புற போக்குவரத்து நெரிசலையும் குறைக்கலாம்.
இது கிளாம்பாக்கத்திற்கு மாற்றான திட்டமல்ல; “கோயம்பேடு + கிளாம்பாக்கம்” Multi-Hub முறையில், வட/மத்திய/மேற்கு சென்னை பயணிகள் கோயம்பேட்டிலும், தென் சென்னை மற்றும் சுற்றுப்பகுதி பயணிகள் கிளாம்பாக்கத்திலும் பேருந்தில் ஏறும் வசதியை ஏற்படுத்த வேண்டும். இதனால் வட, மத்திய மற்றும் மேற்கு சென்னை பயணிகள் கிளாம்பாக்கம் செல்ல சுமார் இரண்டு மணி நேரம் வரை கூடுதலாகப் பயணித்து, இரண்டு பேருந்துகளை மாற்றிப் பிடிக்கும் சிரமம் குறைந்து, கோயம்பேட்டிலிருந்தே ஒரே பேருந்தில் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணிக்க
முடியும்; அதேவேளையில் பயணிகளுக்கு நேரம் மற்றும் செலவு மிச்சமாகி, அரசுக்கு நுழைவுக் கட்டணம் மற்றும் வணிக வசதிகள் மூலம் வருவாயும் கிடைக்கும்.
ஆகையால், தமிழ்நாடு முதல்-அமைச்சர் இக்கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பயணிகளின் நேரம், செலவு மற்றும் பயணச் சிரமங்களைக் குறைத்து அவர்களுக்கு பெரும் பயனளிக்கும் வகையிலும் உரிய நடவடிக்கை எடுத்து உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.