ஆம்னி பேருந்துகளில் விதிமீறல் - 5 நாட்களில் ரூ.59.02 லட்சம் வசூல்

உரிய சாலை வரி செலுத்தப்படாமல் இயக்கப்பட்ட 6 பேருந்துகள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகளில் விதிமீறல் - 5 நாட்களில் ரூ.59.02 லட்சம் வசூல்
Published on

சென்னை,

விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 1169 ஆம்னி பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை மற்றும் இ-சலான் வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பண்டிகைக் காலங்களில் சென்னையிலிருந்து சுமார் 3000 ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்காக இயக்கப்பட்டு வருகின்றன.

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் மற்றும் பயணிகளிடமிருந்து நடைமுறையில் உள்ள கட்டணத்தை விட அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் பெறப்பட்டதை தொடர்ந்து, கடந்த ஐந்து தினங்களாக, தமிழ்நாடு முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய குழு அமைத்து ஆம்னி பேருந்துகளில் சிறப்பு வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உரிய நடவடிக்கை

அதன்படி, கடந்த ஐந்து தினங்களில் தமிழ்நாடு முழுவதும் ஆம்னி பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 1169 ஆம்னி பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை மற்றும் இ-சலான் வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அபராதம் வசூல்

இந்த சிறப்பு தணிக்கையின் போது, விதிமீறல்களுக்காக இணக்க கட்டணம் (Compounding fee) ரூ.24,44,100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் அபராதமாக வாகன உரிமையாளாரிடமிருந்து உடனடியாக (Spot fine) ரூ.5,40,000 வசூலிக்கப்பட்டது. மேலும், பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு தமிழ்நாட்டில் இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளிடமிருந்து தமிழ்நாட்டிற்கு செலுத்த வேண்டிய வரியாக ரூ.53,62,074 வசூலிக்கப்பட்டது. இதன் மூலம், கடந்த ஐந்து தினங்களில் மட்டும் ஆம்னி பேருந்துகள் தொடர்பாக வரி மற்றும் இணக்கக் கட்டணமாக மொத்தம் ரூ.59,02,074 வசூலிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தணிக்கையின் போது, 15.09.2026 வரை, அதிக கட்டணம் வசூலித்ததாக கண்டறியப்பட்ட 11 ஆம்னி பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாமல் (Fitness Certificate) மற்றும் உரிய சாலை வரி செலுத்தப்படாமல் இயக்கப்பட்ட 6 பேருந்துகள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளில் ஆன்லைன் மூலம் பயணிகளால் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டை வாகன உரிமையாளர் ரத்து செய்யும் நேர்வில், அந்த பயணிகளுக்கு மாற்றுப்பேருந்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படவேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்து அனுமதிச்சான்று ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

40 சிறப்பு தணிக்கை குழுக்கள்

பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், விதிமீறல்களை கட்டுப்படுத்தவும் இந்த சிறப்பு வாகனத் தணிக்கை தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும். இதனை உறுதிசெய்வதற்காக தமிழ்நாட்டில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய சுமார் 40 சிறப்பு தணிக்கை குழுக்கள் அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புகார் தெரிவிக்க வேண்டிய கைப்பேசி எண் : 9384808333. புகார் தெரிவிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: tc.tn@nic.in

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com