

சென்னை
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னையில் 28-ந் தேதி அ.தி.மு.க., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க, 200 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவைதொடர்ந்து டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு சபாநாயகர் ப.தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னையில் 28-ந் தேதி (திங்கட்கிழமை) அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள், என சுமார் 200 பேர் கலந்துகொள்கின்றனர். இதற்காக, தனித்தனியாக கடிதம் எதுவும் அனுப்பப்படவில்லை. போன் மூலம் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கான தேதி முடிவு செய்யப்படும் என தெரிகிறது. அதாவது, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செயல்பட முடியாத நிலையில், பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் பரிந்துரைத்தால் பொதுக்குழுவை கூட்டலாம் என்பது அக்கட்சியின் சட்ட விதியில் உள்ளது. எனவே, அதன் அடிப்படையில், ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்களின் ஒப்புதலை பெற்று பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை கட்சி பதவிகளில் இருந்து நீக்கவும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. அதேபோல், கட்சியில் நியமிக்கப்படவுள்ள வழிகாட்டு குழுவுக்கும் ஒப்புதல் பெறப்பட உள்ளது.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை உறுப்பினர்களை சேர்த்தல், நீக்குதல் போன்ற அனைத்து அதிகாரங்களும் பொதுச் செயலாளருக்கே இருக்கிறது. எனவே, விரைவில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையத்திடம் கடிதம் அளிக்கப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.