சாம்பல் புதன்கிழமையையொட்டிகிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

சாம்பல் புதன்கிழமையையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
சாம்பல் புதன்கிழமையையொட்டிகிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
Published on

பண்ருட்டி, 

ஏசு கிறிஸ்து, தான் சிலுவையில் அறையப்படும் நாள் நெருங்குவதை அறிந்து, உலக மக்களின் பாவங்களை தீர்ப்பதற்காக உபவாசமிருந்து ஜெபித்தார். இந்த காலத்தை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து 40 நாட்கள் உபவாசமிருந்து ஜெபிப்பது வழக்கம். இந்த 40 நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலம் என்றும், புனித நாட்கள் என்றும் கூறுகின்றனர்.

தவக்காலத்தில் நற்சிந்தனை, நல் ஒழுக்கம், நற்பண்பு, அடுத்தவர்களுக்கு உதவும் நோக்கத்தோடும் மற்றும் புலால் உண்ணாமலும் இருந்து 40 நாட்கள் உபவாசமிருந்து, தவக்காலம் கடைபிடிக்கப்படும். இதனால் அவர்கள் வாழ்க்கையில் நல்ல நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும், உடல் ஆரோக்கியம் பெறும் என கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தவக்காலம் நேற்று தொடங்கியது. இந்த புனித நாள் சாம்பல் புதன் என்று அழைக்கப்படுகிறது.

சிறப்பு பிரார்த்தனை

இதையொட்டி கடலூர் மஞ்சக்குப்பம் தூய இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் நேற்று காலை பங்குதந்தைகள் வின்சென்ட் மரிய லூயிஸ், பிரான்சிஸ் ஆகியோர் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. பின்னர் கடந்த ஆண்டு குருத்தோலை பவனியின் போது பயன்படுத்தப்பட்ட குருத்தோலைகளை எரித்து உருவாக்கப்பட்ட சாம்பலை கிறிஸ்தவர்களின் நெற்றியில் சிலுவை அடையாளமாக பங்குதந்தைகள் பூசி ஆசிர்வாதம் செய்தனர். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

பண்ருட்டி

பண்ருட்டி பணிக்கன்குப்பம் புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை மரிய ஆனந்தராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கடலூர் மஞ்சக்குப்பம் தூய எபிபெனி ஆலயம், ஆற்காடு லுத்தரன் திருச்சபை உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சாம்பல் புதன்கிழமையை முன்னிட்டு நேற்று சிறப்பு பிரார்த்தனை, திருப்பலிகள் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com