

சென்னை,
அ.தி.மு.க. அரசின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரனுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இதனால் அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
இதே போல் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அ.தி.மு.க அம்மா அணியை சேர்ந்த அன்வர்ராஜ எம்.பி தினகரனை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். தற்போது கட்சி வேறு, ஆட்சி வேறாக உள்ளது. அதிமுக சார்பில் நடக்கும் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் தினகரன் பங்கேற்பாரா என்பது மாலை தெரிய வரும். ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதை கட்சி உயர்மட்ட நிர்வாகிகள் முடிவு செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.