இந்திய உணவு கழகம் சார்பில் மானிய விலையில் அரிசி, கோதுமை விற்பனை - மத்திய அரசு அதிரடி உத்தரவு

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசு அறிவித்த புதிய திட்டத்தின்படி இந்திய உணவு கழகம் அரிசி கிலோ ரூ.22-க்கும், கோதுமை கிலோ ரூ.21-க்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வருகிறது.
இந்திய உணவு கழகம் சார்பில் மானிய விலையில் அரிசி, கோதுமை விற்பனை - மத்திய அரசு அதிரடி உத்தரவு
Published on

சென்னை,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர போர்க்கால அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு உதவிடும் வகையில் அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உணவுகளை சமைத்து அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று வழங்கி வருகின்றன. இவ்வாறு உணவு வழங்குபவர்களுக்கு தேவையான அரிசி மற்றும் கோதுமை போன்றவற்றை சலுகை விலையில் இந்திய உணவுக்கழகம் வழங்கி வருகிறது.

இதுகுறித்து சென்னையில் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் (எப்.சி.ஐ) தெற்கு மண்டல நிர்வாக இயக்குனர் ஆர்.டி.நசீம் கூறியதாவது:-

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகளை கொண்ட இந்திய உணவுக் கழகத்தின் தெற்கு மண்டலத்தில் 303 கிடங்குகள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 14 லட்சம் டன் உணவு தானியங்களை பாதுகாக்கும் வகையில் 69 கிடங்குகள் உள்ளன. இவற்றில் 2.80 கோடி மூட்டைகள் உணவு தானியங்கள் கையிருப்பில் உள்ளன. தமிழகத்தில் உள்ள 6 கோடி மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மாதம் ஒன்றுக்கு 3 லட்சம் டன் உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. இதுதவிர டெல்டா மாவட்டங்களில் மாநில அரசு கொள்முதல் செய்யும் உணவு பொருட்களையும் பயன்படுத்தி கொள்கின்றனர்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் தமிழகத்திற்கு அடுத்த 3 மாதத்திற்கு உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காக கூடுதலாக 1.78 லட்சம் டன் உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. இதேபோன்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு வழங்க உத்தரவிட்டு உள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் உணவு பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதில் மத்திய அரசு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது.

இதற்காக தமிழகத்திற்கு ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து அரிசியும், மத்திய பிரதேசத்தில் இருந்து கோதுமையும் ரெயிலில் கொண்டு வரப்படுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை நூறாவது ரெயில் தமிழகம் வந்தது.

இவற்றின் மூலம் 52 லட்சம் மூட்டைகள் உணவு தானியங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. எங்களிடம் இருக்கும் இருப்புடன் சேர்த்து 53 லட்சம் மூட்டை உணவு தானியங்கள் தமிழக ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், பாதிக்கப்படக்கூடிய பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு ஏழை மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சமைத்த உணவை வழங்கி நிவாரணப் பணிகளில் ஈடுபடுகின்றன. இவர்களுக்கு மத்திய அரசு ஒரு புதிய பயனாளி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

குறிப்பாக மானிய விலையில் அரிசி மற்றும் கோதுமையை வழங்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி அரிசி கிலோ ரூ.22-க்கும், கோதுமை கிலோ ரூ.21-க்கும் நேரடியாக மானிய விலையில் விற்பனை செய்கிறோம். அரிசி கிலோ ரூ.37 அசல் விலையாகும். ஆனால் பொதுமக்கள் நலன் கருதி மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் மட்டும் இந்த திட்டத்தை பயன்படுத்த முடியும்.

உணவு பொருட்கள் தேவைப்படும் தொண்டு நிறுவனங்கள் முறையாக அரசிடம் பதிவு செய்திருக்க வேண்டும். பெறப்படும் உணவு பொருட்களை சமைத்தே வழங்க வேண்டும். அரிசியாக வழங்கக்கூடாது. உணவு பொருட்களை பெற்று செல்லும் தொண்டு நிறுவனங்கள் குறித்த தகவலையும் அந்தந்த மாவட்ட கலெக்டருக்கும் தகவல் தெரிவிக்கப்படும்.

அவர்கள் இதனை முறையாக தொண்டு நிறுவனங்கள் பயன்படுத்துகிறார்களா? என்பதை கண்காணிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com