மின்தடை தொடர்பான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தல்

மின்தடை தொடர்பான பொதுமக்கள் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தினார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது.
மின்தடை தொடர்பான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தல்
Published on

சென்னை,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைமை அலுவலகத்தில் 29-7-2021 அன்று (நேற்று) மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் சென்னை வடக்கு, மத்திய, மேற்கு, தெற்கு-1, தெற்கு-2 மின்பகிர்மான வட்டங்கள் தொடர்புடைய மேற்பார்வை பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் மற்றும் உதவிச் செயற்பொறியாளர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:-

தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கும் நற்பெயரை ஏற்படுத்தும் துறையாக நாம் விளங்க வேண்டும். பொதுமக்களின் புகார்களின் மீது உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மேலும் வரும் புகார்கள் உங்கள் பகுதி அல்லாதவையாக இருப்பின் சம்மந்தப்பட்ட பகுதி அலுவலுருடன் அதனைப் பகிர்ந்து தீர்வுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும் செய்தித்தாள், தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் மின்சாரம் தொடர்பான எந்தக் குறையாக இருந்தாலும் அந்தக் குறை குறித்தும் அதனை நிவர்த்தி செய்ததற்கான தகவலைக் குறித்தும் உடனடியாகத் எனக்குத் தகவல் அனுப்ப வேண்டும்.

அடுத்த 5 ஆண்டிற்கான திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சரிடம் ஒப்புதல் பெறக்கூடிய நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். 5 ஆண்டுகளில் புதிய மின்உற்பத்தியைப் பெருக்க வேண்டும். மின்விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். எந்த பிரச்சினைகளும் வராமல் திட்டம் வகுக்க வேண்டும். மேலும் 5 ஆண்டிற்கான திட்டத்தை ஒரு வாரத்தில் அளிக்க வேண்டும்.

மேலும் கைப்பேசி எண் பதிவு செய்யப்பட்ட மின்நுகர்வோர்களுக்கு மின்னகத்தின் புகார் மையத்தின் தொடர்பு எண் 94987 94987 என்ற எண்னை அனைவருக்கும் குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும். அனைத்துப் பிரிவு அலுவலகங்களிலும், மின்னகம் புகார் மைய எண் பொதுமக்களின் பார்வையில் தெரியும்படி அமைக்க வேண்டும்.

மின் கட்டண ரசீதுகளில் மின்னகத்தைக் குறித்தும், புகார் எண் 9498794987 குறித்தும் தகவல்கள் அச்சிடப்பட்டு, அனைத்து மின்நுகர்வோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

உதவிப் பொறியாளர்கள் மற்றும் உதவிச் செயற்பொறியாளர்கள் மின்னகப் புகார் மையத்தில் தொடர்பு கொண்டு, புகார்களை பெற்று, உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிப்பதுடன் தக்க நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்.

புகார்களுக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு மின்தடை நிவர்த்தி செய்யப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட புகார்தாரருக்கு உதவிப் பொறியாளர் மற்றும் உதவிச் செயற்பொறியாளர் மூலமாக உரிய அறிவிப்பு வழங்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தினசரிப் பணிகள் குறித்த விபரம் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழக இணைய தளத்தில் தினமும் பதிவேற்றம் செய்யப்படவும், மேற்கொள்ளப்பட்ட முக்கியப் பணிகள் குறித்து அறிக்கைகள் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு வரும்படி பத்திரிகை மற்றும் சமூகவலைதளங்களுக்கு வழங்கவும் வேண்டும்.

அரசுக்கும், முதல்-அமைச்சருக்கும் நற்பெயர் உருவாக்க வேண்டும். நம்முடைய செயல்பாடுகளில் கவனமாக இருந்து நாம் சிறப்பாகச் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி, மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையத்தை ஆய்வுசெய்து வரபெற்ற புகார்களையும், அதனை நிவர்த்திச் செய்த விவரங்களையும் கேட்டறிந்து புகார்கள் மீது தீர்வுகாண எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அறிவுரை வழங்கினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com