தேர்தல் நாளன்று பரிதாபம்: பெண் வேட்பாளர் திடீர் மரணம்

ஊராட்சியில் வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் திடீரென உடல்நலக்குறைவால் பரிதாபமாக இறந்தார்.
தேர்தல் நாளன்று பரிதாபம்: பெண் வேட்பாளர் திடீர் மரணம்
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் மேற்கு ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் விவசாயி மோகன். இவரது மனைவி மல்லிகா (வயது 42). உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்காக போட்டியிட்டார். கடந்த சில நாட்களாக வயிற்று வலி காரணமாக பேராவூரணியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மல்லிகா நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்தார்.

இந்தநிலையில், நள்ளிரவுக்கு பிறகு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால் உறவினர்கள் நேற்று காலை மீண்டும் பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மல்லிகா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து இறந்த மல்லிகாவின் உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தகவல் அறிந்து வந்த உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இந்தநிலையில் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கி தொடர்ந்து நடந்தது.

வேட்பாளர் இறந்த தகவல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதால் உடனடியாக வாக்குச்சீட்டிலும், வாக்காளர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த போஸ்டரிலும் மல்லிகாவின் பெயர் மற்றும் அவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் ஆகியவற்றை அழித்தனர். மேலும், மல்லிகா இறந்துவிட்டதாக போஸ்டரில் எழுதப்பட்டது.

வாக்குப்பதிவு நாளில் பெண் வேட்பாளர் உடல்நலக்குறைவால் இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இதேபோல் மற்றொரு வேட்பாளரும் மரணம் அடைந்தார். அவரது பெயர் சோபன்(வயது44).

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே புன்னக்காயல் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சோபன் என்ற அருள் வளன் வெளிநாட்டில் கப்பல் மாலுமியாக வேலை செய்து வந்தார். மேலும் இவர் நாம் தமிழர் கட்சி தெற்கு மாவட்ட மீனவர் பாசறை செயலாளராக இருந்தார். இவருடைய மனைவி ஜோர்லின். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்தநிலையில் சோபன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர் ஊரக உள்ளாட்சி தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் ஆழ்வார்திருநகரி பஞ்சாயத்து யூனியனில் 7-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். இதற்காக அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அங்கு கடந்த 27-ந் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலின்போது வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவில் சோபன் தனது வீட்டில் இருந்தபோது, அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை சிகிச்சைக்காக ஆத்தூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இறந்த சோபனின் உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் நாம் தமிழர் கட்சியினர், பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் புன்னக்காயல் கல்லறை தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com