

புனித வெள்ளியை முன்னிட்டு ஈரோட்டில் கிறிஸ்தவர்களின் பாதயாத்திரை வழிபாடு நடந்தது
பாதயாத்திரை
இயேசு கிறிஸ்து சிலுவையில் உயிர் விட்டதையும் அவரது சிலுவைப்பாடுகளையும் நினைவுகூரும் புனித வெள்ளி வருகிற ஏப்ரல் 7-ந்தேதி கடை பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலம் கடை பிடித்து வருகிறார்கள்.
தவக்காலத்தில் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை தியானித்து வழிபாடு செய்வது வழக்கம்.
அதன்படி ஈரோடு புனித அமல அன்னை ஆலயம் சார்பில் நேற்று பாத யாத்திரை வழிபாடு நடந்தது. சூளை பாரதி நகரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் இருந்து நேற்று இரவு 9.30 மணிக்கு பாதயாத்திரை தொடங்கியது.
ஊர்வலம்
புனித அமல அன்னை ஆலய பங்குத்தந்தையும் ஈரோடு மறை வட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர் பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஆலய உதவி பங்குத்தந்தை நல்ல ஜேக்கப்தாஸ் தலைமையில் பக்தர்கள் சிலுவையுடன் பாதயாத்திரையில் பங்கேற்றனர்.
ஜெபமாலை, சிலுவைப்பாதை வழிபாடு பிரார்த்தனை என்று சாலை வழியாக ஊர்வலமாக நடந்து சென்றனர்.
சத்தி ரோடு, சிக்கய்யநாயக்கர் கல்லூரி, வீரப்பன்சத்திரம், சுவஸ்திக் கார்னர், மணிக்கூண்டு வழியாக நடு வீதியில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயம் சென்று, பின்னர் புனித அமல அன்னை ஆலயத்தில் நள்ளிரவில் பாதயாத்திரை நிறைவு பெற்றது. பாத யாத்திரையில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு புனித அமல அன்னை ஆலய வளாகத்தில் சமபந்தி விருந்து நடக்கிறது.