தியாகிகள் தினத்தை முன்னிட்டு அரசு சார்பில் மாலை அணிவித்து அமைச்சர்கள் மரியாதை

தமிழ்நாடு அரசின் சார்பில் ஜூலை 17-ஆம் தேதி தியாகிகள் தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
தியாகிகள் தினம்,அமைச்சர்கள் மரியாதை
Published on

சென்னை,

தியாகி சங்கரலிங்கனார், தியாகி ஆர்யா (என்கிற) பாஷ்யம், தியாகி செண்பகராமன் ஆகிய தியாகிகளின் திருவுருவச்சிலைகளுக்கு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இது தொடர்பாக இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

மலர் தூவி மரியாதை

தமிழ்நாடு அரசின் சார்பில், தியாகிகள் தினத்தை முன்னிட்டு, இன்று சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள தியாகி சங்கரலிங்கனார், தியாகி ஆர்யா (என்கிற) பாஷ்யம், தியாகி செண்பகராமன் ஆகிய தியாகிகளின் திருவுருவ சிலைகளுக்கு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

பாஷ்யம்

தியாகி ஆர்யாவின் இயற்பெயர் பாஷ்யம். தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள சேரன்குளத்தில் 1907-ஆம் ஆண்டு பிறந்தார். மன்னார்குடியில் பள்ளிப்படிப்பையும் திருச்சி நேஷனல் கல்லூரியில் பட்டப்படிப்பையும் படித்தார். இந்திய சுதந்திர போராட்டத்தில் அதிக அக்கறை கொண்டவராக திகழ்ந்தார்.

சைமனே திரும்பி போ

நீடாமங்கலத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தி சொற்பொழிவை கேட்டு, இந்திய தேசத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தவும் தன்னை தயார்ப்படுத்தி கொண்டார். நீடாமங்கலத்தில் நடைபெற்ற ‘சைமனே திரும்பி போ’ போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டார்.

தேசிய கொடி

மேலும், சென்னை தலைமை செயலகம் அமைந்திருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருக்கும் கொடிக்கம்பத்தில் உள்ள பிரிட்டிஷ் கொடியான யூனியன் ஜாக்கை இறக்கி விட்டு, இந்திய தேசிய கொடியை ஏற்றிய மாவீரர் தியாகி ஆர்யா (எ) பாஷ்யம் ஆவார்.

சிறந்த ஓவியர்

ஓவிய கலையில் சிறந்து விளங்கியதால் அரசியல் கருத்து படங்கள், கதைகளுக்கான சித்திரங்கள், ஏடுகளுக்கான முகப்புப் படங்கள் போன்றவற்றை வரைந்த மிகச்சிறந்த ஓவியர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், மகாகவி பாரதியார் ஆகியோரின் படங்கள் இவரால் வரையப்பட்டவையாகும்.

தியாகி சங்கரலிங்கனார் விருதுநகரில் உள்ள மண்மலைமேடு கிராமத்தில் பெரிய கருப்பசாமி நாடார் – வள்ளியம்மை தம்பதியினருக்கு 1895-ஆம் ஆண்டு மகனாக பிறந்தார்.

சத்தியாகிரகம்

1914-ஆம் ஆண்டு பெண் கல்வி மேம்பாட்டை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட சங்கத்தின் செயலாளராக பணியாற்றினார், கதர் இயக்கத்தில் சேர்ந்து கதர் வளர்ச்சி பணியையும் மேற்கொண்டார். 1917-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து திருச்சியில் நடைபெற்ற சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டமைக்காக 6 மாதம் சிறை தண்டனை பெற்றார்.

தமிழ்நாடு

1920-ஆம் ஆண்டு ராஜாஜியை சந்தித்து அவரது சீடரானார். இன்றைய தமிழகத்தின் பெயர் சென்னை மாகாணம் என இருந்தபோது, அப்பெயரை மாற்றி ‘தமிழ்நாடு’என பெயரிட வேண்டுமென கோரி தியாகி சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தனது 58-ஆவது வயதில் உயிர் துறந்தார்.

ஜெய்ஹிந்த்

தியாகி செண்பகராமன் திருவனந்தபுரத்தில் 15.9.1891 அன்று பிறந்தார். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஆங்கில அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். தாய்நாட்டை வணங்கி ‘ஜெய்ஹிந்த்’ எனும் கோஷத்தை முழங்கியவர் தியாகி செண்பகராமன் அவர்கள். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்திற்கு முன்னோடியாக இருந்த இந்திய தேசியத் தொண்டர் படையை உருவாக்கியவர்.

26.5.1934 அன்று தியாகி செண்பகராமன் உயிர் நீத்தார். சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள தியாகிகள் மணிமண்டபம் 2.10.1998 அன்று திறந்து வைக்கப்பட்டது.

சிலைகள்

இதனை தொடர்ந்து அம்மண்டபத்தின் முகப்பில் அமைந்துள்ள தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார் ஆகியோரின் மார்பளவு சிலைகள் 17.7.1999 அன்றும், தியாகி செண்பகராமன்திருவுருவச்சிலை 17.7.2008 அன்றும் திறந்து வைக்கப்பட்டன.

தியாகிகள் தினம்

இந்திய நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்டு இன்னுயிர் நீத்த விடுதலை போராட்ட தியாகிகள் சங்கரலிங்கனார், ஆர்யா (எ) பாஷ்யம், செண்பகராமன் ஆகியோரின் பெரும் தொண்டினை போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஜூலை 17-ஆம் தேதி தியாகிகள் தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் நெ.மரிய வில்சன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.அருள்பிரகாசம், ஆர்.அபிஷேக், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் அ.அருண் தம்புராஜ். மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com