போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை

கொலை வழக்கில் மனு எழுத்தரை பொய்யாக சேர்த்ததால் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தேனி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை
Published on

கொலை வழக்கில் கைது

உத்தமபாளையத்தை சேர்ந்தவர் பிரிதிவிராஜ். இவர் ஒரு கேண்டீனில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி ஹெலினா பாத்திமா. கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். தனது மனைவி பிரிந்து சென்றதற்கு மனைவியின் சித்தி மகன் லாரன்ஸ் தான் காரணம் என்று பிரிதிவிராஜ் கருதினார். இதனால், கடந்த 2017-ம் ஆண்டு உத்தமபாளையத்தில் உள்ள ஒரு பள்ளி அருகில் லாரன்ஸ் மீது பிரிதிவிராஜ் பெட்ரோல் ஊற்றி கொளுத்தினார். இதில் படுகாயம் அடைந்த லாரன்ஸ் உயிரிழந்தார்.

இந்த வழக்கில், பிரிதிவிராஜ் மற்றும் அவருடைய நெருங்கிய நண்பரான உத்தமபாளையத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் ஆகிய 2 பேர் மீதும் உத்தமபாளையம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இதில் ராஜேஷ்குமார் உத்தமபாளையம் தாலுகா அலுவலகம் அருகில் பொதுமக்களுக்கு மனு எழுதி கொடுத்து வந்தார். இந்த வழக்கு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது.

பொய்யாக சேர்ப்பு

இந்த வழக்கில் கடந்த 8-ந்தேதி மாவட்ட செசன்சு நீதிபதி சஞ்சய் பாபா தீர்ப்பு வழங்கினார். அதில், பிரிதிவிராஜுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ராஜேஷ்குமார் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கில் ராஜேஷ்குமார் கோர்ட்டில் அளித்த வாக்குமூலத்தில், "பொதுமக்கள் பல பேருக்கு பலமுறை போலீசாருக்கு எதிரான புகார் மனு எழுதிக் கொடுத்ததால் என்னை இந்த வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொய்யாக சேர்த்துள்ளார்" என்று கூறினார்.

ஒழுங்கு நடவடிக்கை

இந்த வழக்கில் விசாரணை அதிகாரியான போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டார். அதுதொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவில், "இந்த வழக்கில் ராஜேஷ்குமார் பொய்யாக சிக்க வைக்கப்பட்டுள்ளதை இந்த கோர்ட்டு கண்டுபிடித்துள்ளது. அரசியலமைப்பின் 21-வது பிரிவை மீறி சட்டவிரோதமாக 29 நாட்கள் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே, விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனின் சம்பளத்தில் இருந்து அவர் இழப்பீடு பெற உரிமை உண்டு. ராமகிருஷ்ணன் தற்போது சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றுக்கிறார். 3 ஆண்டுகளுக்கு அவருக்கு விசாரணை அதிகாரம் வழங்கக்கூடாது. ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் கொடுக்கப்பட்டால் அந்த அதிகாரம் பறிக்கப்படும். ராமகிருஷ்ணன் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காகவும், ஒரு அப்பாவியை மரண தண்டனை விதிக்கும் குற்றச்சாட்டில் பொய்யாக சேர்த்ததற்காகவும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தீர்ப்பின் நகல் தமிழக டி.ஜி.பி.க்கு அனுப்பப்பட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com