

ஆலந்தூர்,
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்துள்ள போர் தீவிரமடைந்து உள்ளதால் உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்கள், மத்திய அரசின் மூலம் சிறப்பு விமானங்களில் அழைத்து வரப்படுகின்றனர். அதன்படி இதுவரை கடந்த 3 நாட்களாக தமிழகத்தைச் சேர்ந்த 88 பேர் சென்னை வந்து உள்ளனர்.
இந்தநிலையில் 4-வது நாளாக நேற்று உக்ரைனில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் மீட்கப்பட்ட சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 53 மாணவர்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர்.
பா.ஜ.க. வரவேற்பு
சென்னை விமானம் நிலையம் வந்த தமிழக மாணவர்களை பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக அரசின் சார்பில் அயலக நலம் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அவரவா சொந்த ஊர்களுக்கு தமிழக அரசின் செலவில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அப்போது தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடியின் முயற்சியால் உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்கள் அழைத்து வரப்படுகின்றனர். 4 மத்திய மந்திரிகள், எல்லா விமான நிறுவன விமானங்களையும், விமானப்படை விமானங்களையும் முழுமையாக பயன்படுத்தி இந்திய மாணவர்களை மீட்டு வர பிரதமர் உத்தரவிட்டு உள்ளார். 3 நாளில் 26 விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு உள்ளனர். இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து மாணவர்களும் வந்து சேருவார்கள்.
இந்திய கொடியை
கார்கிவ் பகுதியில் உள்ள மாணவர்களை மீட்டு அழைத்து வரவேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது. பிரான்ஸ், போலந்து உள்பட 3 நாட்டு அதிபர்களிடம் மோடி பேசி உள்ளார். வாய்ப்புகள் உள்ள நாடுகளின் எல்லை பகுதிக்கு இந்தியர்களை வரவழைத்து நாட்டுக்கு அழைத்து வர பிரதமரின் நோக்கமாக உள்ளது.
பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாட்டை சேர்ந்தவர்கள் கூட இந்திய கொடியை பயன்படுத்தி வெளியே வந்து கொண்டு இருக்கிறார்கள். வேறு எந்த நாடும் முயற்சி எடுக்கவில்லை. இந்தியாதான் பேசி முயற்சி செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
உக்ரைன் வாழ் தமிழர்களின் மீட்பு அழைப்புகளை ஒருங்கிணைப்பதற்கான மாநில தொடாபு அதிகாரி ஜெசிந்தா லாசரஸ் கூறியதாவது:-
உக்ரைனின் கீவ் பகுதியில் இருந்து பெரும்பாலும் அனைத்து தமிழக மாணவர்களும் பாதுகாப்பாக வெளியேறி விட்டார்கள். கார்கிவ் நகரில் சுமார் 1,500 இந்திய மாணவர்கள் ரெயிலுக்காக காத்திருக்கிறார்கள். அதில் தமிழக மாணவர்கள் 200 பேர் இருக்கிறார்கள். அவர்களும் வெளியே வந்துவிட்டால் அங்குள்ள தமிழக மாணவர்கள் அனைவரும் வந்துவிடுவார்கள்.
சுமியில் இந்திய மாணவர்கள் 500 பேர் இருக்கிறார்கள். அதில் தமிழக மாணவர்கள் 57 பேர் உள்ளனர். அவர்களை வெளியே கொண்டு வருவதற்கு சற்று சிரமமாக உள்ளது. உக்ரைனில் பணம் இன்றி கார் ஏற முடியாமல் தமிழக மாணவர்கள் எங்கெல்லாம் தவித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுக்கு இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் ஆன்-லைனில் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
குளிரால் அவதி
சென்னை வந்த மாணவி பிரீத்தி சோபியா கூறும்போது, உக்ரைன் கிழக்கு பகுதியில் உள்ள மாணவர்களை விரைவாக மீட்டு அழைத்து வரவேண்டும். இந்தியாவில் உள்ள வானிலை அங்கு இல்லை. அதிக குளிர், உணவு இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். மத்திய, மாநில அரசுகள் விரைவாக மீட்க வேண்டும். மேற்கு பகுதியிலும் அபாய ஒலி கேட்க ஆரம்பித்துவிட்டது. இந்த பகுதியில் எப்போது போர் தொடங்கும் என தெரியவில்லை. கிழக்கு பகுதியில் நிறைய பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றார்.
மாணவி கமலேஸ்வரி கூறும்போது, உக்ரைனில் சிக்கி உள்ள மாணவர்கள் நிலை பரிதாபமாக உள்ளது. இதை பார்க்க கூடிய பெற்றோரும் பதற்றமாக தான் இருக்கிறார்கள். 6-வது ஆண்டு படித்து வருகிறேன். 2 மாதத்தில் படிப்பு முடிய வேண்டிய நிலை. படிப்புக்கும் அரசு உதவிட வேண்டும். இந்திய தூதரக அதிகாரிகள் உதவியாக இருந்தார்கள் என்றார்.