

நாகர்கோவில்,
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று தூத்துக்குடியில் சுற்றுப்பயணத்தை முடிக்கும் அவர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்து ஓய்வெடுக்கிறார்.
மறுநாள் (புதன்கிழமை) காலை 9 மணிக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்க இருக்கும் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
பின்னர் பல்வேறு புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குமரிக்கு வரும் வழித்தடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆலோசனை நடத்தினார்.
அதே சமயத்தில் முதல்- அமைச்சர் வருகையையொட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட உள்ளது. இதன் முன்னோட்டமாக பிரதான நுழைவு வாயில் மூடப்பட்டு, பின்பகுதியாக பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளே செல்ல போலீசார் அனுமதித்தனர்.
இதற்கிடையே மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கலெக்டர் அலுவலகம், அரசு விருந்தினர் மாளிகை உள்பட முதல்-அமைச்சர் செல்லும் முக்கிய இடங்களிலும் வெடிகுண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சி சார்பில் முக்கிய சாலைகள் அனைத்தும் சீரமைக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.