“என்னை அச்சுறுத்த தொடர்ந்து பொய் வழக்குகள் போடப்படுகின்றன” அரசு மீது, கருணாஸ் எம்.எல்.ஏ. தாக்கு

என்னை அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து என் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு வருகின்றன என்று தமிழக அரசை கருணாஸ் எம்.எல்.ஏ. தாக்கி பேசினார்.
“என்னை அச்சுறுத்த தொடர்ந்து பொய் வழக்குகள் போடப்படுகின்றன” அரசு மீது, கருணாஸ் எம்.எல்.ஏ. தாக்கு
Published on

சென்னை,

சென்னை எழும்பூர் நீதிமன்றம் அளித்த உத்தரவை தொடர்ந்து, வேலூர் சிறையில் இருந்து கருணாஸ் நேற்று காலை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அங்கிருந்து சென்னை வந்த கருணாஸ் நேற்று பிற்பகல் நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், தொடர்ந்து என் மீது வழக்குகள் போடுவதில் காட்டும் வேகத்தை, ஒட்டுமொத்த போலீசாரும் நல்ல வழிகளில் செலவு செய்தால், மக்களுக்கும் பயனாக இருக்கும். திட்டமிட்டு என் மீது பொய் வழக்குகள் போட்டு, என்னை அச்சுறுத்தும் விதமாக எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, என்றார்.

இதனைத்தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

சட்டசபையில் பேச விடவில்லை

கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவீர்களா?

பதில்:- யூகங்களுக்கு இப்போது என்னால் விடையளிக்க முடியாது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து சட்டசபையில் பேச வாய்ப்பு கேட்டபோது, எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குறித்த வரலாறு 6-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டபோதும், சட்டசபையில் எனக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது.

தொடர்ந்து எனது பேச்சுரிமைக்கு, குறிப்பாக என் சமூகம் சார்ந்த உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்கான வாய்ப்புகள் சட்டசபையில் எனக்கு வழங்கப்படவில்லை. துப்பாக்கி சூடு சம்பவத்தை நியாயப்படுத்தி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அளித்த அறிக்கையில் எனக்கு உடன்பாடு இல்லை. அதில் நம்பகத்தன்மை, உண்மை இல்லை. அந்த அறிக்கையில் துப்பாக்கி சூடு என்ற வார்த்தையே இல்லை, என்று சட்ட சபைக்கு வெளியே எனது கோபத்தை பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்தேன். அதற்காகத்தான் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து என் மீது பொய் வழக்குகளை இந்த அரசு போட்டு வருகிறது.

கூவத்தூரில் நடந்தது என்ன?

கேள்வி:- எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருந்த கூவத்தூர் விடுதியில் என்ன நடந்தது, என்பதற்கான ஆதாரத்தை வெளியிடுவதாக கூறியிருந்தீர்களே?

பதில்:- இப்போதும் அதைத்தான் சொல்கிறேன். தேவைப்படும் பட்சத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கூவத்தூர் விடுதியில் நடந்தது குறித்து எனக்கு தெரிந்த எல்லாவற்றையும் சொல்ல நான் தயாராக இருக்கிறேன்.

வழக்குகளை தேடும் போலீசார்

கேள்வி:- இனிமேல் உங்களது அரசியல் நிலைப்பாடு எப்படி இருக்கும்?

பதில்:- 2009-ம் ஆண்டு முதல் இன்றுவரை எத்தனையோ மேடைகளில், கூட்டங்களில் நான் பேசியிருக்கிறேன். ஆனால் இதுவரை எந்த ஒரு சமுதாயத்தையோ, எவரையும் ஒருமையிலோ பேசியது கிடையாது. இப்போது போடப்பட்ட வழக்குகளுக்கு முன்பு என்மீது எந்தவொரு சிறுவழக்குகள் கூட இல்லை என்பது தான் உண்மை. இப்போது வரை என்னை மீண்டும் சிறையில் அடைப்பதற்காக எல்லா மாவட்டங்களிலும் உள்ள எல்லா போலீஸ் நிலையங்களிலும் என்மீது ஏதாவது வழக்குகள் இருக்கிறதா? என்று தேடி வருகிறார்கள்.

எங்கள் மீது ஒரு அதிகாரி திட்டமிட்டு வழிப்பறி செய்ததாக வழக்கை போடுகிறார். அது உண்மை இல்லை என்பதை நீதிமன்றம் சென்று நிரூபித்திருக்கிறோம். ஆனாலும் தொடர்ந்து வஞ்சகமாக, சுயநலத்தோடு அந்த அதிகாரி பொய்யான வழக்கை போடுகிறார் என்பதை உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்ட்டி, போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோரிடம் புகாராக கொடுத்தோம்.

நியாயம் வென்றது

ஆனால் அந்த உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அதிகாரியை அழைத்து விசாரிக்காமல், என்மீதும், என்னை சுற்றியுள்ளோர் மீதும் பொய் வழக்கு போட்டு வருகிறார்கள். இப்போது நியாயம் வென்றிருக்கிறது. நீதி வெற்றி பெற்றுள்ளது. என்னை போல சாமானியருக்கு நீதிமன்றம் தான் எப்போதுமே கோவில்.

மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார்.

ஆயிரம் வழக்குகள் வந்தாலும் சந்திக்க தயார்

முன்னதாக வேலூர் ஜெயிலில் இருந்து காலை 7.30 மணியளவில் வெளியே வந்த கருணாஸ் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

என்னை பொறுத்தவரையில் எனக்காக குரல் கொடுத்தவர்களுக்கும், என்னை பழிவாங்க வேண்டும் என்று ஆவலோடு இருந்தவர்களுக்கும், அதையும் கடந்து முக்குலத்தோர் சமுதாயத்தை சார்ந்த என் உறவுகளுக்கும், புலிப் படைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எந்தநிலை வந்தாலும் தன்நிலை மாறாது முக்குலத்தோர் சமுதாயத்துக்காகவும், எதிர்கால முக்குலத்தோர் சந்ததியினர் மானமும், வீரமும் சேர்ந்து இந்த மண்ணிலே வாழ்வதற்காக நான் இன்னும் ஆயிரம் வழக்குகளை சந்திக்க தயாராக உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com