

ராசிபுரம்,
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து உரையாடினார். சேலம் மாவட்டம் மல்லூருக்கு நேற்று மாலை 4 மணிக்கு வந்த கமல்ஹாசன், அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் காரில் நின்றபடி பேசியதாவது:-
பனமரத்துப்பட்டி ஏரி பகுதி ஒரு காலத்தில் சினிமா சூட்டிங்கிற்கு புகழ்பெற்று விளங்கியது. ஆனால் இப்போது அந்த ஏரியின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. வரும் காலங்களில் ஏரி இருக்குமா? இருக்காதா? என்ற நிலைமை வந்துவிடும். ஏரியை தூர்வாரி தண்ணீரை நிரப்ப வேண்டியது அரசின் கடமை. ஆனால் அவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். ஏரியை நாம் எல்லோரும் சேர்ந்து பாதுகாக்க வேண்டும்.
தேர்தல் நேரத்தில் மட்டுமின்றி எப்போதும் உங்களை சந்திக்க நான் வருவேன். நாளைய புதிய தமிழகத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு இளைஞர்களுக்கு உண்டு. நாளைய சிற்பிகள் இந்த கூட்டத்தில் இருக்கிறார்கள். நமக்கு இன்னும் நிறைய வேலைகள் இருக்கிறது. குறுகிய காலஅவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதை நாம் நல்லமுறையில் பயன்படுத்த வேண்டும்.
மக்கள் நீதி மய்யம் கட்சி மெதுவாக வளர்ந்து உங்கள் கட்சியாக மாறிக்கொண்டு இருப்பதை நான் கண்கூடாக பார்த்துக்கொண்டு இருக்கிறேன். பெரிய மேடை, ஆடம்பரம் எதுவும் இல்லாமல் நமது உரையாடல் நடக்கிறது. அது தொடர்ந்து நடைபெறும். நாளை நமதே என்பதை உண்மையாக்க வேண்டும் என்றால் இன்று முதல் உழைக்க தொடங்க வேண்டும். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
இதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சென்ற கமல்ஹாசன், அங்கு பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-
ராசிபுரத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ரத்ததான முகாமை நற்பணி மன்ற நிர்வாகிகள் தொடர்ந்து சிறப்புடன் நடத்திவருகிறார்கள். என்னுடன் 17 வயதில் நற்பணிகளை ஆரம்பித்தவர்கள், இப்போது அதே உற்சாகத்துடன் செயல்பட்டு வருவது பெருமையாக உள்ளது.
தமிழக அரசு மீது மக்கள் மிகவும் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை என்னால் கண்கூடாக பார்க்க முடிகிறது. நான் போகும் இடமெல்லாம், வாய்ப்பு வந்தால் நாங்கள் யார் என்று காட்டுகிறோம் என்று பொதுமக்கள் கோபத்திலும், பொறுமையுடனும் இருக்கிறார்கள். அதற்கான காலம் வந்துவிட்டது. இந்த பகுதியில் நெசவு தொழில் முடங்கி கிடப்பதாக எங்களுக்கு சேதி வந்துகொண்டு இருக்கிறது. அதை சரி செய்யும் காலம் விரைவில் வரும். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.