‘மக்கள் பிரச்சினையில் அ.தி.மு.க., பா.ஜனதா கவனம் செலுத்துவது இல்லை’ கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

‘மக்கள் பிரச்சினையில் அ.தி.மு.க. பா.ஜனதா கவனம் செலுத்துவது இல்லை’ என்று தேர்தல் பிரசாரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசினார்.
‘மக்கள் பிரச்சினையில் அ.தி.மு.க., பா.ஜனதா கவனம் செலுத்துவது இல்லை’ கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் கனிமொழியை ஆதரித்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று மதியம் தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட் அருகே பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

சோனியாகாந்தியின் இன்னொரு மகளாக கனிமொழி உள்ளார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உலகமே பார்த்து வியக்கும் வகையில் ஒரு விஷயம் உள்ளது. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது. இதனை மக்களிடையே எடுத்துக் கூற வேண்டும்.

தமிழக முதல்-அமைச்சர் தேனியில் பேசும் போது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேறு தொகுதியை சேர்ந்தவர், தேர்தலுக்கு பிறகு அவர் வீட்டுக்கு சென்று விடுவார் என்று கூறி உள்ளார். எம்.ஜி.ஆர். ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டார். ஜெயலலிதா பர்கூரில் போட்டியிட்டார். அவர்கள் அந்த தொகுதியை சேர்ந்தவர்கள் இல்லை. ஆகையால் முதல்-அமைச்சர் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.

இந்தியா மோடியின் கையில் பாதுகாப்பாக இருக்கும் என்கிறார். முதலில் மோடியின் கையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியே பாதுகாப்பாக இல்லை. அவர் மீதும், அவரது அமைச்சரவை மீதும் பல வழக்குகள் உள்ளன. அவருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில், மோடி தான் இந்தியாவை பாதுகாப்பார் என்று கூறுகிறார்.

காங்கிரஸ் ஆட்சி செய்த 70 ஆண்டு காலத்தில் இந்தியாவுக்கு ஏதாவது பாதிப்பு வந்ததா? காங்கிரசின் கையில் எப்போதும் இந்தியா பாதுகாப்பாக இருக்கும். எடப்பாடி பழனிசாமிக்கு வரலாறு தெரியாது. 20 ஆண்டுகளாக வாயே பேசாமல் ஜெயலலிதாவுடன் இருந்தவர். தற்போது வாயை திறந்து பேசும்போது, இதுபோன்ற தவறான விஷயங்கள் அவரிடம் இருந்து வருகிறது.

பாகிஸ்தானையே இரண்டாக உடைத்த கட்சி காங்கிரஸ். மோடி நாட்டின் பாதுகாப்புக்காக என்ன செய்து இருக்கிறார். அ.தி.மு.க., பா.ஜனதா மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்துவது கிடையாது. கனிமொழி சிறந்த நாடாளுமன்றவாதி, மிகவும் எளிமையானவர். ஆகையால் அவரை வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com