ஆயுத பூஜையையொட்டி பொரி, பூ, பழங்கள் விற்பனை மும்முரம்

ஆயுத பூஜையையொட்டி திருவாரூரில் பொரி, பூ, பழங்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றன. இதனால் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஆயுத பூஜையையொட்டி பொரி, பூ, பழங்கள் விற்பனை மும்முரம்
Published on

ஆயுத பூஜையையொட்டி திருவாரூரில் பொரி, பூ, பழங்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றன. இதனால் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஆயுத பூஜை விழா

தமிழர் திருநாளில் முக்கிய பண்டிகையான ஆயுத பூஜை விழா இன்று(திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஆயுதபூஜையில் இடம் பெறும் பொரி, பொட்டுக்கடலை, அவல், வெல்லம் விற்பனையும் படுஜோராக நடைபெற்றது. பூஜை முடிவில் திருஷ்டி கழிக்க பயன்படுத்தும் பூசணிக்காய், இதை தவிர ஆரஞ்சு, மாதுளை, ஆப்பிள், வாழைப்பழம் மற்றும் தேங்காய் அதிகமாக விற்பனை செய்யப்பட்டன. பொருட்களின் விலை உயர்ந்த நிலையில் ஆயுத பூஜை விழாவை கொண்டாட மக்கள் கடைவீதியில் பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

ஊழியர்கள் கொண்டாட்டம்

வணிக நிறுவனங்கள், கடைகளில் தூய்மை பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அரசு நிறுவனங்கள், அனைத்து துறை அலுவலங்களில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை என்பதால் நேற்று ஆயுதபூஜையை கொண்டாடினர். அரசு வாகனங்கள் அனைத்தையும் கழுவி சுத்தம் செய்து சந்தனத்தால் அலங்கரித்து, வாழை கன்றுகள், தோரணங்கள் கட்டி ஊர்வலமாக சென்று வந்தனர். அனைத்து வீடுகளிலும் சுத்தம் செய்து கழுவி, தங்களது வாகனங்களை தூய்மை செய்து ஆயுதபூஜை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

பூக்களின் விலை உயர்வு

பூஜையில் முக்கிய இடத்தை வகிக்கும் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதில் மல்லி கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது கிலோ ரூ.600 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் முல்லை கிலோ ரூ.400-ல் இருந்து ரூ.700-க்கும், ரோஸ் கிலோ ரூ.100-ல் இருந்து ரூ.260-க்கும், ஜவ்வந்தி கிலோ ரூ.150-ல் இருந்து ரூ.220-க்கும், செண்டு பூ ரூ.40-ல் இருந்து ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.இதுகுறித்து பூ வியாபாரி ரயில் பாஸ்கர் கூறுகையில், பண்டிகை காலங்களில் பூக்கள் விலை என்பது சற்று உயர்வது வழக்கம் தான். தற்போது ஆயுதபூஜை விழா நாளை (இன்று) கொண்டாடப்படும் நிலையில் மல்லி, முல்லை, ஜவ்வந்தி, ரோஸ் என பூக்கள் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.

மக்கள் கூட்டம் அலைமோதியது

இந்த விலை உயர்வு என்பது விழா காலங்களில் ஏற்படும் வழக்கமானது என்பதால் பண்டிகையை கொண்டாடிட மக்கள் ஆர்வதுடன் பூக்களை வாங்கி செல்கின்றனர். இந்த உயர்வு நாளை (இன்று) ஒரு நாள் மட்டுமே, மறுநாள் (நாளை) வழக்கமான விலைக்கு விற்பனை செய்யப்படும்.

ஆயுதபூஜை விழாவையொட்டி திருவாரூர் கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com