

நெல்லை,
தீபாவளி பண்டிகையையொட்டி நெல்லையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கருப்பு கவுனி அரிசி அல்வா மற்றும் பருத்திப்பால் அல்வாவை பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் வாங்கி ருசித்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பொதுமக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடைகள் உடுத்தி, பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை பரிமாறியும் மகிழ்வார்கள். வீடுகளில் பலவகையான இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரித்து உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்குவது பாரம்பரிய வழக்கமாக உள்ளது.
இந்த ஆண்டு தீபாவளியையொட்டி கோவில்பட்டி கடலை மிட்டாய் வியாபாரிகள் 4 புதிய வகை மிட்டாய்களை அறிமுகப்படுத்தினர். அதேபோல், அல்வாவுக்கு பெயர் பெற்ற நெல்லையில் தற்போது 2 புதிய ரக அல்வாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
மன்னர்கள் காலத்தில் அரச குடும்பத்தினரின் உணவாக கருதப்பட்ட பாரம்பரிய கருப்பு கவுனி அரிசியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் 'கருப்பு கவுனி அல்வா' மற்றும் 'பருத்திப்பால் அல்வா' ஆகியவை பாளையங்கோட்டையில் உள்ள பிரபல பேக்கரி கடையில் இந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஊட்டச்சத்துக்கும் பாரம்பரியத்திற்கும் பெயர் பெற்ற கருப்பு கவுனி அரிசியை, அல்வா வடிவில் புதுமையாக தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல், பருத்திப்பால் கொண்டு தயாரிக்கப்படும் அல்வாவும் பாரம்பரிய உணவின் தனித்துவத்துடன் புதிய சுவையை வழங்குகிறது.
வழக்கமான கோதுமை அல்வாவை தாண்டி, புரூட் அல்வா, தேங்காய்ப்பால் அல்வா, வெள்ளரி அல்வா உள்ளிட்ட பல்வேறு புதிய வகை அல்வாக்களும் இனிப்பு பிரியர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளன. அந்த வரிசையில் தற்போது புதிதாக அறிமுகமாகியுள்ள கருப்பு கவுனி மற்றும் பருத்திப்பால் அல்வா ஆகியவற்றுக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவற்றைப் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்று ருசித்து வருகின்றனர்.