கம்பத்தில்முதல் போக நெல் அறுவடை பணி தொடக்கம்:கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

கம்பத்தில் முதல்போக நெல் அறுவடை பணிகள் தொடங்கியது. இதனால் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
கம்பத்தில்முதல் போக நெல் அறுவடை பணி தொடக்கம்:கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
Published on

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான லோயர்கேம்பில் இருந்து பழனிசெட்டிபட்டி வரை சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கரில் முல்லைப்பெரியாறு அணை பாசனம் மூலம் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல்போக பாசனத்திற்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கடந்த ஜூன் 1-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனை பயன்படுத்தி கம்பம், சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் முதல்போக சாகுபடிக்கான நெல் நடவு செய்தனர்.

தற்போது நெற்பயிர்கள் விளைந்து தயாராக இருந்தன. இந்நிலையில் நேற்று முதல் நெல் அறுவடை பணி தொடங்கியது. முதற்கட்டமாக சாமாண்டிபுரம், ஆங்கூர்பாளையம், கருநாக்கமுத்தன்பட்டி பகுதியில் எந்திரம் மூலம் நெல் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை கம்பம் பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கவில்லை.

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வியாபாரிகள், விவசாயிகளை சந்தித்து 62 கிலோ எடை கொண்ட நெல் மூட்டையை ரூ.1,000 முதல் ரூ.1,100 வரை கொள்முதல் செய்து வருகின்றனர் . மேலும் கொள்முதல் செய்த நெல்லிற்கான பணத்தை உடனடியாக தருவதில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர். இதனால் நெல்லை அரசே கொள்முதல் செய்தால் நல்ல விலை கிடைக்கும். எனவே காலதாமதமின்றி அரசு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com