ஓணம் பண்டிகை தொடர் விடுமுறை: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரியில் ஓணம் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியதால் ‘களை’ கட்டியது.
ஓணம் பண்டிகை தொடர் விடுமுறை: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Published on

ஓணம் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி கடந்த 3 நாட்களாக கன்னியா குமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதில் நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால் கூட்டம் அலைமோதியது. அதிகாலையில் கடற்கரையில் திரண்ட சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமான காட்சியை கண்டு களித்தனர்.

தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட படகுதுறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். படகு போக்குவரத்து தொடங்கியதும் படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபம், கண்ணாடி நடை பாலம் வழியாக திருவள்ளுவர் சிலைக்கு சென்றனர்.

சுற்றுலா பயணிகளின் வருகையால் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா போன்ற பகுதிகளில் நேற்று காலையில் இருந்து கூட்டம் நிரம்பி வழிந்தது. கன்னியாகுமரி கடற்கரையில் நேற்று மாலையில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் வருகை அதிகஅளவில் இருந்தது. இதனால் கடற்கரை களை கட்டியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com