ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை

ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை
Published on

சிவகாசி, 

ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.

நடைபயணம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் தொடங்கினார்.. இதன் ஓராண்டு நிறைவையொட்டி நாடு முழுவதும் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம் மேற்கொண்டனர்.

சிவகாசி காமராஜர் சிலையின் அருகில் இருந்து தொடங்கிய இந்த நடைபயணம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் மாணிக்கம்தாகூர் எம்.பி., அசோகன் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர்கள் ஸ்ரீராஜாசொக்கர். ரெங்கசாமி, மாநகர் தலைவர் சேர்மத்துரை, மாநில மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னதம்பி, மாவட்ட செய்தி தொடர்பாளர் மீனாட்சிசுந்தரம், கவுன்சிலர் ரவிசங்கர், ஜீ.பி.முருகன், முன்னாள் கவுன்சிலர் கணேசன், வட்டார தலைவர் பைபாஸ் வைரகுமார், ஷேக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிய அரசியல்

நடைபயணத்தில் கலந்து கொண்ட மாணிக்கம்தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

ராகுல்காந்தி நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு புதிய திசையை கொடுத்தது. அதை போலவே இந்தியாவுக்கும் புதிய அரசியலை கொடுத்துள்ளது.

இந்த அரசியல் மாற்றம் என்பது கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி தொடங்கியது. இதை கொண்டாடும் வகையில் இந்தியா முழுவதும் 900 இடங்களில் இந்த நடைபயணம் நடக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினரையும் காங்கிரஸ் கட்சி மதிக்கிறது. பா.ஜ.க. மதஅடிப்படையில் விவாதம் செய்கிறது. இந்தியா என்பது பாரதத்தை தான் குறிக்கிறது. ஆனால் வேண்டும் என்றே பா.ஜ.க. இதனை விவாதமாக்கி வருகிறது.

சாத்தியமில்லை

எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைத்த போது பா.ஜ.க.வுக்கு பயம் வந்துவிட்டது. இந்தியா கூட்டணியின் பிரதம வேட்பாளர் தேர்தல் காலத்தில் உரிய முறையில் அறிவிக்கப்படும்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது வெறும் விவாத பொருளாகத்தான் இருக்கும். இது நிச்சயம் நடக்க போவதில்லை. அது சாத்தியமில்லை. பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தேர்தல் முதல், பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் வரை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியமே இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com