

19-வது மெகா தடுப்பூசி முகாம்
சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் நடைபெற்ற 19-வது மெகா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், துணை கமிஷனர்கள் மனீஷ், சிம்ரஜீத் சிங் காஹ்லோன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் டாக்டர் காமக்கோட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
இந்தியாவிலேயே வாரம் தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுவது தமிழகத்தில்தான். இந்த மெகா தடுப்பூசி முகாம் மூலம் இதுவரை 3 கோடியே 32 லட்சத்துக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இந்த மெகா தடுப்பூசி முகாம்களில் முதல் தவணை, 2-ம் தவணை, 15 முதல் 18 வயதுக்குட்பட்டோர், பூஸ்டர் தடுப்பூசி போன்றவை செலுத்திக்கொள்ளலாம்.
பூஸ்டர் டோஸ்
2-வது தவணை செலுத்திக்கொண்டு 9 மாதங்கள் நிறைவடைந்தவர்கள், 60 வயது கடந்தவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். இதுவரை 15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்டோர் 25 லட்சத்து 50 ஆயிரத்து 809 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் 76.23 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவுபெற்றுள்ளது. தமிழகத்தில் இதுவரை 9 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 53 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள 5 லட்சத்து 55 ஆயிரத்து 634 பேர் தகுதியானவர்களாக உள்ளனர். இதில் நேற்று (நேற்று முன்தினம்) இரவு வரை 1 லட்சத்து 84 ஆயிரத்து 285 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 525 ஊராட்சிகள், 121 நகராட்சிகள் இருக்கிறது. இதில் 100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசிகள் செலுத்திக்கொண்ட ஊராட்சிகளாக 2 ஆயிரத்து 580 ஊராட்சிகளும், 23 நகராட்சிகளில் 100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது.
தடுப்பூசி செலுத்தாததால் இறப்பு
தமிழகத்தில் இறப்பு சதவீதம் குறைவாக இருப்பது சற்று மனநிறைவை தருகிறது. காரணம் தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 89 சதவீதம் பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 65 சதவீதம் பேரும் செலுத்தியுள்ளதுதான்.
இறப்பு சதவீதம் கூட தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருப்பதால்தான் ஏற்பட்டிருக்கிறது என்பது வருத்தமான செய்தியாகும். இறந்தவர்கள் அனைவரும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் மற்றும் 60 வயதிற்கும் மேற்பட்டோர் இணை நோய் உள்ளவர்கள் ஆவர். எனவே தடுப்பூசியை அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டும்.
தன்னார்வலர்கள்
சான்றிதழ் குளறுபடி காரணமாக தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால் 104 என்ற எண்ணின் மூலம் புகார் அளித்து தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். 2-வது தவணை தடுப்பூசி போடாமல் 1 கோடி பேர் உள்ளனர்.
ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மயிலாடுதுறை, தென்காசி, நெல்லையிலும் தடுப்பூசி போடும் பணியில் மந்தம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.