இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு ஒரு லட்சம் தன்னார்வலர்கள் பதிவு

இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு ஒரு லட்சம் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர்.
இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு ஒரு லட்சம் தன்னார்வலர்கள் பதிவு
Published on

சென்னை,

1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களின் கற்றல் இழப்பை சரி செய்யவும், இடைநிற்றலை தவிர்க்கவும் ஒரு தொலைநோக்கு திட்டமாக கொண்டு வரப்பட்டதுதான் இல்லம் தேடி கல்வித் திட்டம். இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் சமீபத்தில் தொடங்கி வைத்தார்.

வருகிற 15-ந்தேதி முதல் 6 மாதங்களுக்கு இந்த திட்டம் நடைமுறைப்படுத்துகிறது. முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக பிற மாவட்டங்களிலும் அமல்படுத்தப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 34 லட்சம் பள்ளி மாணவர்களில் 20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் வீதம் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் தேவை என கல்வித்துறை தெரிவித்து இருந்தது.

அதன்படி, தமிழகத்தில் 37 மாவட்டங்களில் இருந்து தன்னார்வலர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 29-ந்தேதி நிலவரப்படி, ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 548 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். இதில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 9 ஆயிரத்து 466 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக திருச்சி, தஞ்சாவூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிகம் பேர் பதிவு செய்துள்ளனர். குறைந்தபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 844 பேர் மட்டுமே பதிவு செய்து இருக்கின்றனர். 37 மாவட்டங்களிலும் தன்னார்வலர்களாக பதிவு செய்தவர்களில் பெண்கள்தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com