சென்னையில், கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் பலி

மீண்டும் பல்வேறு நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது.
சென்னையில், கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் பலி
Published on

சென்னை,

உலகையே உலுக்கிய கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் பல்வேறு நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது வரை 4000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதற்கான தீவிரம் இன்னும் தொடங்காத நிலையில் சுகாதாரத்துறை சார்பில் எவ்வித அச்சமும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், சென்னை, சவுகார்பேட்டையைச் சேர்ந்த 69 வயது மூதாட்டி ஒருவருக்கு கருப்பை வாய் புற்றுநோய் இருந்தது. இதற்காக கீமோதெரபி சிகிச்சையில் அவர் இருந்து வந்தார். அதனுடன் சர்க்கரை நோய் மற்றும் நடுக்குவாதம் (பார்க்கின்சன்) பாதிப்பும் இருந்தது. இந்த நிலையில், அவருக்கு இதய செயலிழப்பும் ஏற்பட்டதால் சேத்துப்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மூதாட்டி கடந்த மாதம் 29-ந் தேதி அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவப் பரிசோதனையில் ரத்தத்தில் கிருமித் தொற்று (செப்சிஸ்) ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ச்சியாக, புற்றுநோய் மற்றும் இதய செயலிழப்புக்கான சிகிச்சைகள் அவருக்கு வழங்கப்பட்ட நிலையில் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

அதில் மூதாட்டிக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சூழலில் கடந்த 1-ந் தேதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கான முக்கிய காரணம் இணைநோய்கள்தான் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com