பட்டாசு ஆலை வெடிவிபத்தில் மேலும் ஒரு தொழிலாளி பலி

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் மேலும் ஒரு தொழிலாளி பலி
Published on

எடப்பாடி:-

எடப்பாடி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி இறந்தார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது.

பட்டாசு ஆலையில் வெடி விபத்து

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியம், வெள்ளாளபுரம் ஊராட்சி முனியம்பட்டியை அடுத்த சன்னியாசி கடை பகுதியில் குமார் (வயது 40) என்பவருக்கு சொந்தமான தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. அரசு அனுமதியுடன் செயல்பட்டு வந்த இந்த ஆலையில், விழா காலங்களில் பயன்படுத்துவதற்கான அதிக சத்தத்துடன் வெடிக்கும் வெடிகள் மற்றும் சரவெடிகள், வாணவெடிகள் உள்ளிட்டவை தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வந்தன.

இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி மாலை அந்த ஆலையில் இருந்த பட்டாசுகள் மற்றும் வெடி மருந்துகள் திடீரென வெடித்து சிதறின. இந்த விபத்தில் ஆலையின் மேற்கூரை முழுவதும் சேதம் அடைந்து தீப்பற்றி எரிந்தது.

விபத்தின் போது அங்கு பணியில் இருந்த சன்னியாசி கடை பகுதியை சேர்ந்த அமுதா (45) என்பவர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.

முதியவரும் பலி

பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட, வெள்ளாளபுரம் வாணக்கார தெருவை சேர்ந்த வேடப்பன் (75) என்பவர், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த வேடப்பன் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்தது.

போதிய பாதுகாப்பு சாதனங்கள் இன்றி, விபத்து ஏற்படும் வகையில் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக, சம்பந்தப்பட்ட ஆலையின் உரிமையாளர் குமார் ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு நிவாரண நிதி

மேலும் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த அமுதாவின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம், தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை சங்ககிரி உதவி கலெக்டர் சவுமியா மற்றும் எடப்பாடி தாசில்தார் லெனின் ஆகியோர் அமுதாவின் மகள் மாலதியிடம் வழங்கினர்.

முன்னதாக விபத்தில் படுகாயம் அடைந்து வேடப்பன் சிகிச்சை பெற்று வந்த போது, அவருடைய மனைவி பெருமாயியிடம் ரூ.1 லட்சம் தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு நிவாரண நிதியில் இருந்து அரசு அதிகாரிகளால் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com