

கடலூர்,
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள கோப்பாடி கிராமத்தில் இருக்கும் வாய்க்காலில் இருந்து சுமார் 9 அடி நீளமும் 300 கிலோ எடையும் கொண்ட முதலை ஒன்று இன்று அதிகாலை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது.
அந்த முதலை ராஜேந்திரன் என்பவரின் வீட்டு படிக்கட்டின் கீழே பதுங்கியுள்ளது. இந்நிலையில் தெருநாய்களின் சத்தம் கேட்டு ராஜேந்திரன் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது திடீரென அவரை முதலை தாக்கி கடித்துள்ளது.
அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்து, முதலையிடம் சிக்கிய ராஜேந்திரனை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர், முதலையை லாவகமாக பிடித்து ஏரியில் கொண்டு போய் விடுவித்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், வனத்துறையினர் முதலைகளைப் பிடித்து அருகில் உள்ள ஏரியில் விடுவதால், ஏரியில் தண்ணீர் குறையும்போது முதலைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துவிடுவதாகவும், முதலைகளை வேறு இடத்தில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.