பாலாலயம் செய்யப்பட்டு ஒரு ஆண்டு நிறைவு: மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில் திருப்பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் - பக்தர்கள் கோரிக்கை

பாலாலயம் செய்யப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்த பின்னரும் தொடங்கப்படாத மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில் திருப்பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலாலயம் செய்யப்பட்டு ஒரு ஆண்டு நிறைவு: மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில் திருப்பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் - பக்தர்கள் கோரிக்கை
Published on

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோவில் 108 வைணவ தலங்களில் 63-வது தலமாக உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19, 20, 21 ஆகிய தேதிகளில் யாகசாலை பூஜைகளுடன் பாலாலயம் செய்யப்பட்டு, மூலவர் கருவறை மூடப்பட்டு கோவில் கோபுரம் மற்றும் அனைத்து சன்னதிகளும் மூடப்பட்டது.

பிறகு பழமை மாறாமல் வைணவ ஆகம முறைப்படி கோவில் கும்பாபிஷேம் நடத்த முடிவு செய்யப்பட்டு தமிழக அரசு சார்பில் ரூ.64 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, ஒப்பந்த பணிகளும் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு பணிகளை தொடங்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது. முதல்கட்டமாக கோவில் கோபுரங்களை சீரமைக்க சவுக்கு கம்புகளால் சாரம் அமைக்கப்பட்டது. சாரம் அமைக்கப்பட்டதோடு சரி கடந்த ஒரு ஆண்டாக திருப்பணி வேலைகள் எதுவும் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கோவில் திருப்பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது ஒரு புறம் என்றாலும், மறுபுறம் மூலவர் கருவறையும் மூடப்பட்டு வழிபாடு செய்ய வழிவகை இல்லாததால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

அதனால் கோவிலில் ஒரு மூலையில் கண்ணாடி அறையில் உள்ள உற்வசர் சிலையை மட்டும் வழிபாடு செய்துவிட்டு ஏமாற்றததுடன் செல்வதை காண முடிகிறது. திருப்பணிக்கு தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்கியும் இன்னும் திருப்பணி வேலைகள் ஏன் தொடங்கவில்லை என்று கோவில் நிர்வாகத்தை நோக்கி பக்தர்கள் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர். இது குறித்து சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த பக்தர் ஒருவரும், சென்னை ஐகோர்ட்டில் கோவில் திருப்பணி நடக்காத நிலையில் பூதத்தாழ்வார் அவதார திருவிழா உள்ளிட்ட விழாக்கள் எதுவும் நடத்தப்படவில்லை என்றும் இந்த கோவிலில் நிர்வாக சீர்கேடு உள்ளதாக பொதுநல வழக்கும் தொடர்ந்துள்ளார்.

தமிழக அரசு திருப்பணிக்காக போதுமான நிதி ஒதுக்கியும் கோவில் நிர்வாகத்தினர் என்ன காரணங்களுக்காக திருப்பணி வேலையை தொடங்காமல் கிடப்பில் போட்டுள்ளனர் என்று கேள்வி எழுப்பி அதிருப்தியடைந்த பக்தர்கள் இதுகுறித்து முதல்-அமைச்சருக்கும், அறநிலையத்துறை அமைச்சருக்கும் கடிதம் வாயிலாக உடனடியாக திருப்பணி வேலைகள் தொடங்க கோவில் நிர்வாகத்துக்கு உத்தரவிட கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவில் திருப்பணிக்காக கடந்த 2021-ம் ஆண்டு, நவம்பர் மாதத்தில் 3 நாட்கள் (19, 20, 21) பாலாலயத்தை முன்னிட்டு யாக குண்டம் அமைத்து யாக சாலை பூஜை செய்த அர்ச்சகர்களுக்கு 3 நாட்கள் சம்பளம் மொத்தம் ரூ.4 லட்சத்தில் ரூ.3 லட்சம் மட்டுமே தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள தொகை ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை பாலாலயம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும் வழங்கவில்லை என்று அர்ச்சகர்கள் புகார் தெரிவித்து முதல்-அமைச்சருக்கும், அறநிலையத்துறை அமைச்சருக்கும் கடிதம் அனுப்பி உள்ளனர். தங்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தொகை கையாடல் செய்யப்பட்டதா? என விசாரணை நடத்தி தங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று அர்ச்சகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு ஆண்டு காலமாக நடைபெறாமல் உள்ள திருப்பணி வேலைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com