8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு - மத்திய அரசு உத்தரவு

‘ஆதித்யா எல்-1’ திட்ட இயக்குனர் உள்பட 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்திய அரசின் முதன்மையான தேசிய விண்வெளி முகமையாகும். பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் கடந்த 1969-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

தற்போது நாடு முழுவதும் உள்ள 10 இஸ்ரோ மையங்களில் 16 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். ஏறத்தாழ ரூ.4 ஆயிரத்து 100 கோடி செலவில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய இயக்குனராக விஞ்ஞானி ராஜராஜன், கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள திரவ உந்து அமைப்பு மைய இயக்குனர் விஞ்ஞானி நாராயணன், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மைய இயக்குனராக விஞ்ஞானி நிலேஷ் தேசாய், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் யு.ஆர்.ராவ் செயற்கைகோள் மைய இயக்குனராக விஞ்ஞானி சங்கரன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

அதேபோல், பெங்களூருவில் உள்ள மனித விண்வெளி விமான மைய இயக்குனர் விஞ்ஞானி மோகன், திருவனந்தபுரத்தில் இஸ்ரோ இன்டர்ஷியல் சிஸ்டம்ஸ் யூனிட் என்ற மையத்தின் இயக்குனராக விஞ்ஞானி பத்மகுமார் மற்றும் தெலுங்கானாவின் ஐதராபாத்தில் இஸ்ரோவின் ஏ.டி.ஆர்.ஐ.என். என்ற ஆய்வு கூடத்தில் விஞ்ஞானியாக ராதா தேவி மற்றும் சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட 'ஆதித்யா எல்-1' விண்கலத்தின் திட்ட இயக்குனர் விஞ்ஞானி நிகர் ஷாஜி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுடைய பணி காலம் இம்மாதம் (ஏப்ரல்), மே மற்றும் ஜூன் மாத்துடன் நிறைவு பெறுகிறது. ஓய்வு பெற இருக்கும் இந்த 8 விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com