

திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே 13 வயது சிறுமியை ஆபாசமாக பேசி துன்புறுத்திய வழக்கில் தொடர்புடைய வாலிபருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், அப்புவிளை பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரை கடந்த 2020-ம் ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த சுடர்முத்து(எ) சுடலை (வயது 27) என்பவர் ஆபாசமாக பேசி துன்புறுத்தியது தொடர்பாக, திசையன்விளை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் புலன் விசாரணை முடிவில், நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் சுடர்முத்து(எ) சுடலை மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி சுரேஷ்குமார் இன்று (22.10.2026) குற்றவாளிக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் வழங்கினார்.
இந்த வழக்கில் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ், திசையன்விளை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் எழில் சுரேஷ்சிங், இவ்வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி (தற்போது ஓய்வு), வழக்கின் விசாரணைக்கு உதவி செய்த நீதிமன்ற காவலர் நாகேஷ் வராரோ, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா. சாஸ்திரி பாராட்டினார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது, நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்ப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் முனைப்பில் தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.