

திருச்சி,
தமிழகத்தில் வெங்காயம் விலை ஒரு வார கால மாகவே உயர்ந்து கொண்டே வந்தது. இந்நிலையில் நேற்று திருச்சி காந்திமார்க்கெட் மற்றும் வெங்காய மண்டியில் முதல் ரக சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நிலையில் ஒரு கிலோ ரூ.80, ரூ.90 என்ற நிலையில் விற்பனை ஆகி வருகிறது.
சின்ன வெங்காயத்திற்கு போட்டியாக பல்லாரி எனப்படும் பெரிய வெங்காயமும் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கிலோ ரூ.25 மற்றும் ரூ.30-க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. ஒரு கிலோ ரூ.50, ரூ.60, ரூ.70, ரூ.80 என விற்கப்பட்டு வருகிறது. சின்ன வெங்காயம் விலையும், பெரிய வெங்காயம் விலையும் இப்படி போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்து கொண்டே செல்வது இல்லத்த ரசிகளுக்கு வெங்காயத்தை உரிக்காமலேயே கண்ணீரை வர வைப்பதாக உள்ளது.
விலை உயர்வு தொடர்பாக வெங்காய வியாபாரிகள் கூறுகையில், வட மாநிலங்களில் இருந்து வெங்காயம் வரத்து முற்றிலுமாக நின்று விட்டது. ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம்தான் தற்போது விற்பனையில் உள்ளது. புது வெங்காயம் வரும் வரை இந்த விலை உயர்வு நீடிக்கும் என்றனர்.