கடலூரில் சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயர்வு கிலோ ரூ.100-க்கு விற்பனை

கடலூரில் சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது. ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனையாகிறது.
கடலூரில் சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயர்வு கிலோ ரூ.100-க்கு விற்பனை
Published on

கடலூரில் பான்பரி மார்க்கெட், அண்ணா மார்க்கெட், பக்தவச்சலம் மார்க்கெட் மற்றும் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு 400-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டுகளுக்கு மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

அதேபோல் கடலூர் மாவட்ட விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த காய்கறிகளை அறுவடை செய்து, அதனை உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து செல்கின்றனர். இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரும்பாலான காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்பட்டது. குறிப்பாக ஒரு கிலோ தக்காளி அதிகபட்சமாக கிலோ ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது.

இல்லத்தரசிகள் அதிர்ச்சி

அதேபோல் சின்ன வெங்காயமும் ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனையானது. அதன் பிறகு தக்காளி, சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்ததால், அதன் விலை குறைய தொடங்கியது. தற்போது ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே வேளையில் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனையான சின்ன வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்து, மீண்டும் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதாவது சின்ன வெங்காயத்தின் வரத்து தற்போது குறைவாக இருப்பதால் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக விற்பனையும் குறைந்து காணப்பட்டது. மேலும் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயமும் நேற்று கிலோவுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வரத்து குறைவு

இதுகுறித்து வெங்காய வியாபாரி ஒருவர் கூறுகையில், கடலூருக்கு கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் அருகில் உள்ள பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் தான் அதிக அளவில் சின்ன வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால் தற்போது அனைத்து இடங்களில் இருந்தும் கடலூருக்கு சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதனால் பல கடைகளில் சின்ன வெங்காயம் இருப்பு இல்லை. இதனால் விலை அதிகரிக்க தொடங்கி உள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com