

சென்னை,
சென்னை கோயம்பேட்டில் மொத்த விலையில் நாசிக் வெங்காயம் ஒரு கிலோ ரூ.50-க்கும், சில்லறை விலையில் ரூ.70-க்கும் விற்கப்படுகிறது. மேலும், ஆந்திரா வெங்காயம் கோயம்பேட்டில் மொத்த விலையில் ரூ.40-க்கும், சில்லறை விற்பனையில் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வெங்காயத்தை தமிழக அரசே கொள்முதல் செய்து, கூட்டுறவுத் துறையின்கீழ் இயங்கும் ரேஷன் கடைகள் வாயிலாக ஒரு குடும்ப அட்டைக்கு 1 கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதுவரை 2 கட்டங்களாக வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 3-வது கட்டமாக 700 மெட்ரிக் டன் வெங்காயத்தை தேசிய நுகர்வோர் கூட்டுறவில் இருந்து தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது.
இந்தநிலையில், ரேஷன் கடைகளில் மூன்றாம் கட்டமாக வெங்காயம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் நியாய விலைக்கடைகள், கூட்டுறவு அங்காடிகளில் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ ரூ.35 என்ற விலையில் விற்க நடவடிக்கை எடுத்துள்ளது கூட்டுறவுத்துறை.
கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புகார் தெரிவிக்க 96005 61969 வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று முதல் வெங்காயம் விற்பனை தொடங்கப்பட்ட நிலையில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.