

சென்னை,
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆன்லைன் வருகைபதிவு முறை டிச.1 முதல் அமல்படுத்தப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு நலத்திட்டங்கள் மற்றும் பணிச்சீரமைப்பு குறித்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழகமான டாஸ்மாக் நிர்வாகம் முக்கிய சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் நந்தகுமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில்,
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆன்லைன் வருகைபதிவு முறை டிச.1 முதல் அமல்படுத்தப்படும்.
எழுத்து பூர்வ வருகை பதிவேடு முறை இனி கையடக்க கருவி மூலம் ஆன்லைனுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஊழியர்கள் 8 மணி நேரம் பணி புரிவதை உறுதி செய்யவும், ஊழியர் அல்லாதவர்களை பணியில் அமர்த்தி செல்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் ஊழியர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறையும், மாதம் 2 நாட்கள் சம்பளத்துடன் தற்செயல் விடுப்பும் வழங்கப்படும்.
பணியாளர்கள் மூன்று ஷிப்ட் முறையில் பணி செய்வார்கள். முதல் ஷிப்ட் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையும், இரண்டாவது ஷிப்ட் மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரையும், மூன்றாவது ஷிப்ட் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரையும் இருக்கும். மேற்பார்வையாளர்கள் உட்பட அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஷிப்ட் நேரத்தில் மட்டுமே பணி செய்ய வேண்டும், 8 மணி நேரத்திற்கு மேல் பணி செய்யக் கூடாது. ஒரு ஷிப்டில் குறைந்தது இரண்டு பணியாளர்கள் இருக்க வேண்டும், கடையில் பணிபுரியும் மொத்த பணியாளர்களை மூன்று ஷிப்ட்களுக்கும் சமமாக பிரித்து பணி அமர்த்த வேண்டும். மேற்பார்வையாளர்கள் மூன்று ஷிப்ட்களையும் மேற்பார்வையிடும் பொறுப்பில் இருந்தாலும், அவர்களுக்கும் 8 மணி நேர பணி மட்டுமே என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வார விடுமுறையைப் பொறுத்தவரை, ஒவ்வொரு பணியாளருக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை கட்டாயமாக வழங்கப்பட வேண்டும். விற்பனை குறைவாக உள்ள நாளை கணக்கில் கொண்டு மாவட்ட மேலாளர் அந்த விடுமுறை நாளை முடிவு செய்து, அந்தந்த கடை மேற்பார்வையாளருக்கு தெரிவிக்க வேண்டும். அதேபோல், மாதத்திற்கு 2 நாட்கள் சம்பளத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு வழங்கப்படும். இந்த விடுப்பை பணியாளர்கள் கை கருவி எனப்படும் Handheld Device மூலம் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்க வேண்டும், மேற்பார்வையாளர் அதனை பரிசீலித்து ஒப்புதல் அளிப்பார். தற்செயல் விடுப்பு எடுக்கும் நாளில் ஒரே கடையில் மற்றொரு பணியாளர் விடுப்பில் இருந்தால், கடை பணி பாதிக்காமல் இருக்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் மாதத்திற்கு 2 மணி நேர அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்றும், அதையும் கை கருவி மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.