ஆன்லைன் வகுப்பு: வீடியோ விரிவுரைகள் தயாரிக்க ரூ.6 கோடி மதிப்பில் கருணாநிதி பெயரில் ஆய்வு மையம்

ஆன்லைன் வகுப்புகளுக்கு தேவையான வீடியோ விரிவுரைகள் தயாரிக்க ரூ.6 கோடி மதிப்பில் கருணாநிதி பெயரில் ஆய்வு மையம் அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் சென்னை பல்கலைக்கழகம்.
ஆன்லைன் வகுப்பு: வீடியோ விரிவுரைகள் தயாரிக்க ரூ.6 கோடி மதிப்பில் கருணாநிதி பெயரில் ஆய்வு மையம்
Published on

சென்னை,

பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தேவையான வீடியோ விரிவுரைகளை தயாரிப்பதற்கு கருணாநிதி பெயரில் ரூ.6 கோடியில் ஆய்வு மையம் அமைக்க தமிழக அரசிடம் சென்னை பல்கலைக்கழகம் அனுமதி கேட்டுள்ளது.

லெப்டினென்ட் ஜெனரலுக்கு ஆராய்ச்சி படிப்பு சான்றிதழ்

சென்னை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பியல் துறையில் ஆராய்ச்சி படிப்பு முடித்த மறைந்த லெப்டினென்ட் ஜெனரல் சுப்ரோதா மித்ராவுக்கான ஆராய்ச்சி படிப்பு பட்டத்தை வழங்கும் நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது.

சுப்ரோதா மித்ரா இந்த ஆராய்ச்சி படிப்பின்போது, பயங்கரவாதம்' என்ற தலைப்பில் எழுதிய ஆய்வு கட்டுரைக்காக இந்த பட்டம் அவருக்கு வழங்கப்படுகிறது.

மறைந்த லெப்டினென்ட் ஜெனரல் சுப்ரோதா மித்ராவின் மனைவி புஷ்பிதா மித்ரா மற்றும் அவருடைய மகள் ராதிகா மித்ராவிடம் அதற்கான சான்றிதழை சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி வழங்கினார்.

அப்போது அவருடன் பல்கலைக்கழக பதிவாளர் மதிவாணன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பாண்டியன், பாதுகாப்பியல் துறை தலைவர் உத்தம் ஆகியோர் இருந்தனர். சான்றிதழ் பட்டத்தை பெற்ற சுப்ரோதா மித்ராவின் மனைவி புஷ்பிதா மித்ரா அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

இதையடுத்து சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி நிருபர்களிடம் கூறியதாவது:-

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தமிழுக்கு தொண்டாற்ற வேண்டும். அந்த வகையில் தொலைக்காட்சி மூலம் தொல்காப்பியம் கற்கலாம் என்ற வீடியோ விரிவுரை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக சென்னை பல்கலைக்கழகத்தை மையமாக கொண்டு பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு தேவையான வீடியோ விரிவுரைகளை ஏன் தயாரிக்க கூடாது? என்ற எண்ணம் தோன்றியது. இதற்காக பல்கலைக்கழகத்தில் பல்ஊடக ஆய்வு மையம் (மல்டிமீடியா ரிசர்ஜ் சென்டர்) அமைக்கப்பட வேண்டும்.

இதற்கிடையில், பல்கலைக்கழகங்களுக்கு என்ன தேவைகள் இருக்கிறது? ஏதேனும் புதிய திட்டங்கள் இருக்கிறதா? என்று புதிதாக பொறுப்பேற்ற அரசு கேட்டது. அப்போது இதுபற்றி அரசிடம் தெரிவித்தோம்.

இந்த பல் ஊடக ஆய்வு மையம் அமைக்க ரூ.6 கோடி தேவை என்றும், அவ்வாறு அமைத்தால் அதற்கு கருணாநிதி பெயர் சூட்டலாம் என்றும் தெரிவித்துள்ளோம். அரசின் அனுமதி இதற்கு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

அவ்வாறு கிடைத்ததும் பல்கலைக்கழக மானியக்குழுவின் அங்கீகாரம் பெற்று, சிங்கப்பூரில் உள்ள டிஜிட்டல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, இந்த பல் ஊடக ஆய்வு மையத்தை மென்மேலும் உயர்த்தலாம். இதன் மூலம் சென்னை பல்கலைக்கழகம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும்.

இதுதவிர, வீடியோ விரிவுரைகள் எந்த மொழியில் இருந்தாலும், அதனை தமிழில் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் வேறு மொழியில் இருக்கும் உயர்ந்த கருத்துகளை தமிழக மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட அனைவரும் தெரிந்து கொள்ளமுடியும்.

ஒவ்வொரு கல்லூரிகளும் பேராசிரியர்களின் தகுதிக்கான ஊதியத்தையும், மரியாதையையும் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்க நாங்கள் அனைத்து கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தி வருகிறோம். நடப்பாண்டிலும் பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ. போன்ற படிப்புகளுக்கு கடும் கிராக்கி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com