

சென்னை,
தமிழகத்தில் பத்திரப்பதிவு பணிகளுக்காக, 'ஸ்டார் 3.0' மென் பொருள் அறிமுகமாகி உள்ளது. இதன்படி, புதிய திட்டங்களில் வீடு, மனை விற்பனைக்கான பத்திரங்களை, சார் - பதிவாளர் அலுவலகம் செல்லாமல் பதிவு செய்து கொள்ளலாம். இது தொடர்பாக கட்டுமான நிறுவனங்களுக்கு, பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன் எழுதிய கடிதம் பின்வருமாறு;
புதிய திட்டங்களில் வீடு, மனை விற்பனை பத்திரங்களை, ஆக., 17 முதல் ஆன்லைன் முறையில் மட்டுமே பதிவு செய்ய முடியும்; 'மேனுவல்' முறையில் சார் - பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது. இதன்படி வீடு, மனை வாங்குவோர், சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவன அலுவலகத்தில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்யலாம். இதற்காக அந்த அலுவலகங்களில், குறிப்பிட்ட சில வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
* பத்திரப்பதிவுக்காக, 'வெப் கேமரா' வாயிலாக புகைப்படம் எடுக்கும் இடத்தில், பின்னணி திரை தெளிவாக, எவ்வித படங்களும் இன்றி இருக்க வேண்டும்
* பத்திரப்பதிவு செய்வோரை படம் பிடிப்பதற்கு ஏதுவாக, தரமான, 'வெப் கேமரா' இருக்க வேண்டும்.
* சொத்து விற்பவர், வாங்குபவர் விரல் ரேகை மற்றும் 'பயோமெட்ரிக்' விபரங்களை பதிவு செய்ய, பதிவுத்துறை மென்பொருளுடன் ஒத்துப்போகக்கூடிய கருவியை அமைக்க வேண்டும்.
* கருவிழி பதிவுக்கான கருவிகள் நவீன முறையில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
* பத்திரப்பதிவு நடக்கும் இடத்தில், 100 எம்.பி.பி.எஸ்., வேகத்தில் இணையதள சேவை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* பதிவுத்துறை இணையதளத்தில், 'லாக் இன்' எனப்படும் நுழைவு வசதியை முன்கூட்டியே ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
* கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள், நிதி நிறுவனங்கள், வங்கிகள் ஆகியோர், இதற்கான வசதிகளை உரிய முறையில் ஏற்படுத்த வேண்டும். ஆன்லைன் பத்திரப்பதிவு வெற்றிகரமாக நடக்க, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.