ஆன்லைன் சூதாட்டம்: இன்னும் எத்தனை உயிரிழப்புகளை அரசு வேடிக்கை பார்க்கும்- ராமதாஸ் கேள்வி

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
File image
File image
Published on

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சிலோன் காலனியைச் சேர்ந்த அருண்குமார் என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பல்லாயிரம் ரூபாய் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பல மாதங்களாகவே ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி இருந்த அருண்குமார், வேலைக்கு கூட செல்லாமல் மற்றவர்களிடம் கடன் வாங்கி ஆன்லைனில் ரம்மி விளையாடுவதையே வாடிக்கையாகக் கொண்டிருந்திருக்கிறார். சில நாட்களுக்கு முன் ஒரே நாளில் ரூ.20 ஆயிரத்தை இழந்ததால் ஏற்பட்ட விரக்தி மற்றும் கடன் சுமையால் அருண்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீண்டு வர முடியாது என்பதற்கு இது தான் கொடிய எடுத்துக்காட்டு ஆகும்.

பா.ம.க. நடத்திய தொடர் போராட்டங்களின் காரணமாக ஆன்லைன் சூதாட்டம் இரு முறை தடை செய்யப்பட்டது. ஆனாலும், அந்தத் தடையை நீதிமன்றத்தில் நியாயப்படுத்த தமிழக அரசு தவறி விட்டதன் காரணமாகவே ஆன்லைன் சூதாட்டம் லட்சக்கணக்கான குடும்பங்களை மீள முடியாத கடன் வலையில் சிக்க வைத்திருக்கிறது. தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த நவம்பர் 10ம் தேதி சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்ததற்குப் பிறகு கடந்த ஓராண்டில் மொத்தம் 16 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே வழி சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டில் தடை பெறுவது தான். ஆனால், தீர்ப்பளிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசால் தடை பெற முடியவில்லை.

தமிழக அரசின் அலட்சியம் காரணமாக, ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 16 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது? தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் சுப்ரீம் கோர்ட்டில் ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com