

சென்னை,
தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு 2003-ம் ஆண்டு முதல் தடை இருந்து வருகிறது. அதே நேரத்தில், அண்டை மாநிலமான கேரளா உள்பட சில வடமாநிலங்களில் லாட்டரி விற்பனைக்கு அனுமதி உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சட்ட விரோதமாக ஆன்லைன் வாயிலாக லாட்டரி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதில், ஈடுபடும் சமூக விரோத கும்பம் புதிய யுக்தியை கையாண்டு வருகிறது. கேரளாவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்த கும்பல், ஆன்லைன் லாட்டரி சீட்டு வாங்கினால், சில மணி நேரங்களில் கோடீஸ்வரர் ஆகலாம் என்று வாட்ஸ்-அப் மூலம் வலை விரிக்கின்றனர். அவ்வாறு, ஆசையில் வருபவர்களை, லாட்டரி சீட்டு விற்பனை நிறுவனத்தின் வாட்ஸ்-அப் குழுவில் இணைக்கின்றனர். அந்த குழுவில், ஏற்கனவே உறுப்பினராக உள்ளவர், நம்மை டேக் செய்தால் மட்டுமே, அக்குழுவில் புதிய ஆட்கள் சேர்க்கப்படுவார்கள்.
இதுபோன்று, சட்டவிரோத லாட்டரி சீட்டு விற்பனை கும்பல்கள், வாட்ஸ்-அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் என பல சமூக வலைதள செயலிகள் மூலமாக குழுக்கள் அமைத்து பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றன.
தினமும் 4 முறை நடைபெறும் ஆன்லைன் லாட்டரி குலுக்கலில் பங்கேற்க விரும்புபவர்கள், அதற்கான கட்டணத்தை முதலிலேயே செலுத்திவிட வேண்டும். அதற்கு தனியாக கூகுள் பே எண் தந்துவிடுவார்கள். அதன்படி, 5 பிரிவாக லாட்டரி விற்கப்படுகிறது. அதற்கு ரூ.12, ரூ.25, ரூ.30, ரூ.60, ரூ.120 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லாட்டரி சீட்டு எண்களை, அதை வாங்கும் நபரே தேர்வு செய்யலாம். அதாவது, தனக்கு ராசியான 6 இலக்க எண்ணை, லாட்டரி சீட்டு விற்பனை நிறுவன முகவர்களுக்கு தனிப்பட்ட முறையில், அவர்களுடைய மொபைல் எண்களுக்கு அனுப்ப வேண்டும். குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட எண்களை, அவர்கள் குழுவில் அனுப்புவார்கள். அதில், நாம் அனுப்பிய 6 இலக்க எண்ணில், கடைசி இலக்க எண் சரியாக இருந்தால், குறைந்தபட்சம் ரூ.100, 2 இலக்க எண் சரியாக இருந்தால், குறிப்பிட்ட ஒரு தொகை பரிசுப்பணம் என ஜிபே மூலம் அனுப்பிவைக்கப்படும்.
ஆனால், பெரிய தொகையை வழங்காமல் இருக்க புதிய மோசடியை ஏ.ஐ. மூலம் அந்த கும்பல் கையாள்கிறது. அதாவது, குழுக்கள் நடைபெறும்போது அதை வீடியோவாக பதிவு செய்து குழுவில் பதிவிடுவார்கள். ஆனால், யாருமே தேர்வு செய்யாத எண்களை ஏ.ஐ. மூலம் தேர்ந்தெடுத்து அறிவித்துவிட்டு, அந்த எண்களுக்குத்தான் பெரிய தொகையான முதல் மற்றும் 2-ம் பரிசு விழுந்ததாக அறிவிப்பார்கள். ஆனால், லாட்டரி சீட்டு வாங்குபவர்கள், தனக்கு எப்படியும் அதிர்ஷ்டம் அடிக்கும் என்ற நம்பிக்கையில் மொத்த பணத்தையும் இழந்து விடுவார்கள்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆன்லைன் லாட்டரி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இந்த புதிய மோசடியை தடுக்க பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இது போலீசாருக்கு தெரியுமா? என்பதுதான் கேள்வியாக உள்ளது.