ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் எனக்கூறி ஆசிரியரிடம் ரூ.57.45 லட்சம் மோசடி

பண மோசடி செய்த மர்மநபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோசடி
கோப்புப்படம்
Published on

தஞ்சாவூர்,

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 41 வயது நிரம்பியவர் தற்போது தஞ்சையில் தங்கி ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ந்தேதி அவரது பேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப்பிற்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும் மர்ம நபர் ஒருவர் அவரை தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது ஆன்லைன் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் திட்டம் குறித்து கூறி அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.

தொடர்ந்து அந்த மர்ம நபர் தெரிவித்த வங்கி கணக்குகளில் 11 தவணையாக ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் ஆசிரியர் மொத்தம் ரூ.57 லட்சத்து 45 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். ஆனால் அந்த மர்மநபர் கூறியது போன்று எவ்வித லாப பணமும் வரவில்லை. இதையடுத்து மர்மநபரை அவர் தொடர்பு கொள்ள முயன்றார். அப்போது செல்போன் எண் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை ஆசிரியர் உணர்ந்துள்ளார்.

இது குறித்து தஞ்சை சைபர் கிரைம் போலீசில் ஆசிரியர் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஆசிரியர் பணம் அனுப்பிய வங்கி கணக்குகள் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், கர்நாடகா, மராட்டிய மாநிலங்களில் உள்ளது தெரிய வந்தது. தொடர்ந்து பண மோசடி செய்த மர்மநபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com