டெல்டா மாவட்ட நீர்நிலைகளில்14 சதவீதம் மட்டுமே தண்ணீர் இருப்பு: விவசாயிகள் கவலை

விவசாய சாகுபடிக்கே கிடைத்த தண்ணீர் போதுமானதாக இல்லாத நிலையில் உள்ளது.
டெல்டா மாவட்ட நீர்நிலைகளில்14 சதவீதம் மட்டுமே தண்ணீர் இருப்பு: விவசாயிகள் கவலை
Published on: 

தஞ்சாவூர்,

காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையும் எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால் டெல்டா மாவட்ட நீர்நிலைகளில் 14 சதவீதம் மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்து உள்ளனர்.

12 லட்சம் ஏக்கர் பாசனம்

காவிரி டெல்டா மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரங்களாக காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகள் உள்ளன. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கல்லணைக்கு வந்து சேர்ந்து, அங்கிருந்து பல்வேறு ஆறுகள் மற்றும் கால்வாய்கள் வழியாக பிரித்து அனுப்பப்படுகிறது.

இதன் மூலம் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடு துறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. குறுவை, சம்பா, தாளடி என முப்போக சாகுபடிக்கும் இந்த நீர் ஆதாரங்களே முக்கிய பங்கு வகிக்கின்றன.

போதிய தண்ணீர் இல்லை

ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் சில வாரங்களிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் ஆறுகள் மற்றும் அவற்றின் கிளை வாய்க்கால்கள் வழியாக நீர்நிலைகளுக்கு தண்ணீர் செல்வது குறைந்தது. விவசாய சாகுபடிக்கே கிடைத்த தண்ணீர் போதுமானதாக இல்லாத நிலையில், ஏரி, குளங்களை நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டது.

டெல்டா மாவட்டங்களின் நீர்நிலைகளுக்கு காவிரி நீர் மட்டுமின்றி வடகிழக்கு பருவமழையும் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. குறிப்பாக பருவமழை காலங்களில் பெய்யும் மழையால் காட்டாறுகள் மற்றும் நீர்வரத்து ஓடைகள் வழியாக ஏரி, குளங்கள் நிரம்புவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை டெல்டா மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இதனால் ஏற்கனவே குறைந்த அளவில் இருந்த நீர் இருப்பும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

ஏரி, குளங்கள்

டெல்டா மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் மொத்தம் 764 ஏரி, குளங்கள் உள்ளன. இவற்றில் 737 ஏரி, குளங்கள் ஒன்றோடொன்று தொடர்புடையவை. அதாவது ஒரு ஏரி அல்லது குளத்துக்கு வரும் தண்ணீர் நிரம்பிய பின்னர், அங்கிருந்து வெளியேறி அடுத்தடுத்த ஏரி, குளங்களுக் குச் செல்லும் வகையில் நீர்வழித் தொடர்புகள் அமைந்துள்ளன.

இவை தவிர 27 ஏரி, குளங்கள் தனித்த நீர்நிலைகளாக உள் ளன. மேலும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை வடகிழக்கு பருவமழைக் காலத்தில் காட்டாற்று வெள்ளம் மற்றும் மழைநீர் வரத்து மூலம் நிரம்பும் தன்மை கொண்டவை.

14 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு

டெல்டா மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் மொத்தம் 6,687 மில்லியன் கனஅடி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். ஆனால் தற்போதைய நிலவரப்படி வெறும் 966 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே இருப்பில் உள்ளது.

மொத்த கொள்ளளவுடன் ஒப்பிடும்போது இது 14 சதவீதம் மட்டுமே ஆகும். மீதமுள்ள 86 சதவீத கொள்ளளவு காலியாக உள்ளது. அதாவது முழு கொள்ளளவுடன் ஒப்பிடுகையில் சுமார் 5,721 மில்லியன் கனஅடி தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. காவிரியில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதும், பருவமழையும் போதிய அளவு பெய்யாததும் நீர்நிலைகளின் நீர் இருப்பு குறைவதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

நிலத்தடி நீரை நம்பியுள்ள விவசாயிகள்

இதன்படி டெல்டா மாவட்டங்களிலேயே தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக 51 சதவீதம் மழை பற்றாக்குறை நிலவுகிறது. அடுத்ததாக திருவாரூர் மாவட்டத்தில் 32 சதவீதமும், மயிலாடு துறை மாவட்டத்தில் 31 சதவீதமும், நாகப்பட்டினம் மாவட்டத் தில் 19 சதவீதமும் மழை குறைந்துள்ளது.

காவிரி நீர் வரத்து குறைந்துள்ளதுடன் ஏரி, குளங்களிலும் போதிய தண்ணீர் இல்லாததால் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் நிலத்தடி நீரை நம்பியே சாகுபடி பணிகளை மேற் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பில் விவசாயிகள்

ஏற்கனவே சாகுபடி பணிகளுக்கு தண்ணீர் தேவை அதிகரித்துள்ள நிலையில், நீர் நிலைகளில் இருப்பு வேகமாக குறைந்து வருவது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மழை பெய்யாவிட்டால் அடுத்தடுத்த சாகுபடி பணிகளுக்கும், பயிர்களை பாதுகாப்பதற்கும் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

எனவே இனிவரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து நீர்நிலைகள் நிரம்புமா? அல்லது நிலத்தடி நீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்ய வேண்டிய நிலை தொட ருமா? என்ற எதிர்பார்ப்பில் டெல்டா விவசாயிகள் உள்ளனர்.

X