

சென்னை,
பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு 5 சதவீதம் மட்டுமே சரக்கு சேவை வரி விதிக்க மத்திய அரசை, மாநில அரசு வற்புறுத்தவேண்டும் என்று தி.மு.க. வர்த்தகர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வர்த்தகர் அணி கூட்டம்
தி.மு.க. வர்த்தகர் அணியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் தலைமை தாங்கினார்.
தி.மு.க. துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, செய்திதொடர்பு இணை செயலாளர் பிரசன்னா, வர்த்தகர் அணி இணைச்செயலாளர் கிராகம்பெல் மற்றும் துணை செயலாளர் பாண்டிச்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-
5 சதவீத சரக்கு சேவை வரி
* சரக்கு மற்றும் சேவை வரியை 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என்ற விகிதத்தில் விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனை 2018-19-ம் ஆண்டு ஆரம்பித்தால் சிறு வியாபாரிகளுக்கு வசதியாக இருக்கும். நடுத்தர மக்கள் மகிழ்ச்சியடையும்படி பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு 5 சதவீதம் மட்டுமே வரி விதிக்க மத்திய அரசை, மாநில அரசு வற்புறுத்த வேண்டும்.
* மத்திய அரசு வெளியிட்ட புதிய 10 ரூபாய் நாணயங்கள் பயன்பாட்டிற்கு மிகவும் சிரமமாக உள்ளது. ஆகையால் புதிய 10 ரூபாய் நாணயங்களை திரும்பப்பெற வேண்டும்.
* காலதாமதம் செய்யாமல் 1,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடவேண்டும்.
மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு
* மாநகராட்சிகளில் தொழில்-வணிக வாரியத்திடம் 2017-18-ம் ஆண்டுக்கான உரிமம் புதுப்பிக்க வரும் வணிகர்கள் உறுப்பினர்கள் இல்லாததால் கெடுபிடியில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
* மு.க.ஸ்டாலினை தி.மு.க. செயல் தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு, அவரை பாராட்டுவதோடு, பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உள்பட அனைவருக்கும் நன்றி.
சபாநாயகருக்கு கண்டனம்
* சட்டசபையில் ஜன நாயக குரல்வளையை நெறித்திடும் வகையில் நியாயம் கேட்ட சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை போலீஸ் உயர் அதிகாரிகளை அழைத்து வந்து அடித்து, ஆடைகளை கிழித்து எறிவதற்கு காரணமான சபாநாயகர் தனபாலுக்கு கண்டனம்.
* மு.க.ஸ்டாலினின் உயிருடன் விளையாடுவதை தமிழக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
* விவசாயிகளின் டிராக்டர்களுக்கு சுங்கச்சாவடிகளில் கடுமையான கட்டணம் வசூலிப்பதை மத்திய அரசு தவிர்க்கவேண்டும்.
* மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் படங்களை தனது அலுவலகங்களில் இருந்து தமிழக அரசு எடுக்கவேண்டும்.
மேற்கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.